கிரானைட் முறைகேடு வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிக்க சகாயம் இன்றும் ஆஜராகவில்லை

3 hours ago 2

மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிக்க சகாயம் இன்றும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், கீழவளவு, ஒத்தக்கடை, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி அளவுக்கு அதிகமாகவும், உரிய அனுமதியின்றி அரசு புறம்ேபாக்கு நிலங்களிலும் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததாக கடந்த 2011ம் ஆண்டில் புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய கலெக்டர் சகாயம் கிரானைட் முறைகேடு மூலம் அரசுக்கு ரூ. பல ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அளித்திருந்தார். இவருக்கு பிறகு மதுரை கலெக்டராக பொறுப்பேற்ற அன்சுல் மிஸ்ரா, கனிமவளம், வருவாய், காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு துறைகளை ஒருங்கிணைத்து புகாருக்குள்ளான சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஜிபிஎஸ் மற்றும் டிரோன்களின் உதவியுடன் ஆய்வு செய்தார். ஆய்வில் முறைகேடு நடந்ததை உறுதி செய்து மேல் நடவடிக்கைக்காக அரசுக்கு பரிந்துரைத்தார். இவரது பரிந்துரையின் அடிப்படையில் பிரபல கிரானைட் தொழிலதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு தொழிலதிபர்கள் மீது தனித்தனியாக 92 வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டது. பிஆர்பி உள்ளிட்ட பலர் கைதாகினர்.

இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு சட்ட ஆணையரும், விசாரணை அதிகாரியுமான சகாயம் தலைமையிலான குழுவினர் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரித்தனர். இக்குழு அறிக்கை அடிப்படையில் வழக்குகளின் விசாரணை மதுரையிலுள்ள கனிமவள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு கனிமவள நீதிமன்றத்தின் சார்பில் சகாயத்திற்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், சகாயம் தனது தாயின் உடல்நிலை, குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், வீடியோ கான்பரன்சில் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாமா என சம்மன் அனுப்பிய நிலையில், சகாயம் கனிமவள நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் சிவக்குமாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தனது பாதுகாப்பிற்கு வழங்கிய போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றதால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரைக்கு சென்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க முடியாது. தனக்குரிய பாதுகாப்பை திரும்ப பெற்றது ஒருதலைபட்சமானது என கூறியிருந்தார்.

இந்நிலையில், மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் பகுதியில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை, கனிமவள சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோகேஷ்வரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் சிவக்குமாரிடம் நீதிபதி, ‘ஏன் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியான சகாயம் இன்றும் ஆஜராகவில்லை. அவருக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. சாட்சியம் அளிக்க அவருக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையென்றால் இந்த நீதிமன்றம் உத்தரவாக பிறப்பிக்க தயாராக உள்ளது எனக் கூறி விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தார்.

The post கிரானைட் முறைகேடு வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிக்க சகாயம் இன்றும் ஆஜராகவில்லை appeared first on Dinakaran.

Read Entire Article