கிரக தோஷங்கள் என்ன செய்யும்? அதை நீக்கிக் கொள்ள வழி என்ன?

13 hours ago 2

?கிரக தோஷங்கள் என்ன செய்யும்? அதை நீக்கிக் கொள்ள வழி என்ன?
– சு.ஆனந்தராவ், தேனி.

ஒரு ஜாதகத்தில் பல்வேறு கிரக தோஷங்கள் இருக்கும் அந்த கிரக தோஷங்கள் எப்படி வேலை செய்கிறது என்பதை நடை முறையில் தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, ஒருவருடைய ஜாதகத்தில் கல்வி ஸ்தானம் பலம் குறைந்து இருந்தால், அவருக்கு படிப்பில் ஆர்வம் இருக்காது. படித்தாலும் கவனம் இருக்காது. கல்வி ஸ்தானம் பலம் குறைந்த இவர்கள் தங்களுக்கு படிப்பே இல்லை என்று முடிவெடுத்து விடக்கூடாது. கல்விக்கான அதிதேவதைகளான சரஸ்வதியை வணங்கலாம் தட்சிணாமூர்த்தியை வணங்கலாம், ஹயக்ரீவரை வணங்கலாம். இந்த மூர்த்திகளை தியானம் செய்துவிட்டு, முயன்று படித்தால் விஷயங்கள் மனதில் தங்கும். கல்வியில் ஆர்வம் பிறக்கும். சிற்சில தடங்கல்கள் இருந்தாலும் கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைத்து முன்னேறிவிடுவார்கள்.

?வாசற்படியில் ஏன் உட்காரக் கூடாது?
– கௌசல்யா கார்த்திக், சென்னை.

தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம். ஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்டலட்சுமியும் வாசம் செய்வது போல, குலதெய்வம் குடியிருப்பதாக சாஸ்திரங்களில் கூறப்படுகிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் கதவை சத்த மில்லாமல் திறக்கவும், மூடவும் கூறுவார்கள். அடிக்கடி எண்ணெய் விட்டு சுலபமாக மூடும்படி வைத்திருப்பார்கள். வீட்டின் தலைவாசலில் இருபுறங்களிலும் விளக்கு ஏற்றி வைப்பது பண்டைய கால வழக்கமாக நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வீட்டில் குடியிருப்பவர்கள், வீட்டிற்குள் நுழையும் முன் குடும்ப தேவதைகளை வணங்கிச் செல்லுவதற்கு உயரம் குறைவாக முந்தைய காலங்களில் கதவுகள் வடிவமைக்கப்பட்டன. கோயில்களில் வாசல் படியை மிதிக்காமல் தாண்டி எப்படி உள்ளே செல்கிறோமோ, அதே போல்தான் வீட்டுவாசல் படிகளைத் தாண்டி உள்ளே செல்லவேண்டும். நம் வீட்டின் நிலை வாசல்படிகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வழிபடுவதும் இந்த தேவதைகளுக்குதான். அத்தகைய தெய்வீக சக்தி வாய்ந்த இந்த நிலைவாசல் படியை மிதித்துக் கொண்டு உள்ளே செல்லக் கூடாது. அது போல் ஒரு போதும் வாசல் படியில் அமரக் கூடாது. வீட்டின் தலைவாசலில் தலை வைத்து படுக்கக் கூடாது, தரித்திரம் ஏற்படுத்தும் என்பார்கள். அங்கு நின்று தும்முவது, தலை வாருவது போன்றவற்றைச் செய்தால் வீட்டில் தரித்திரம்தான் உண்டாகும் என்பது பெரியவர்கள் வாக்கு.

?நெல்லிமரத்திற்கு என்ன சிறப்பு?
– ஸ்ரீதேவி, திருச்சி.

நெல்லியை பூஜையில் வைத்து வழிபடுவதால் குடும்பத்தில் லட்சுமிகடாட்சம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால், அதில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் நெல்லி திகழ்கிறது. நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. நெல்லி ஆயுள் விருத்தி தரக்கூடியது. எவ்வித தீய சக்திகளும் நெல்லி மரத்தை அணுகமுடியாது. நெல்லி மரமானது நேர்மறை எண்ணங்களை நம்மைச்சுற்றி உண்டாக்கக்கூடியது. துவாதசி பாரணையில் அவசியம் நெல்லியை சேர்க்க வேண்டும்.

?நான் நிறைய புத்தகங்களைப் படிக்கின்றேன். ஒரு புத்தகம் சிறந்த புத்தகம், அதை அவசியம் படிக்க வேண்டும் என்பதை எதை வைத்துக் கொண்டு முடிவெடுப்பது?
– ஸ்ரீனிவாசன், விழுப்புரம்.

ஆன்றோர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கின்றார்கள். நாம் படிக்கக் கூடிய புத்தகம் நமக்கும், நம்முடைய ஆத்மாவுக்கும் பலம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு அந்த நூலுக்கு மூன்று விதமான சிறப்புகள் இருக்க வேண்டும்.

1. சொன்னவர் யார்?,
2. சொன்ன விஷயம் என்ன?
3. அதை யார் கேட்டார்கள்?
– என்ற மூன்று கேள்விகளுக்கும் நல்ல முறையில் பதில் அமைய வேண்டும். இப்படி இருந்தால்தான் அது நமக்கு உதவக்கூடிய புத்தகம். அப்படிப் பட்ட புத்தகங்கள்தான் திருக்குறள், பகவத் கீதை, தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் முதலிய நூல்கள்.

?கற்பூர ஆரத்தி காண்பிக்கும் போது, கண்ணை மூடி தியானம் செய்யலாமா?
– ராமநாதன், திருச்செங்கோடு.

“கண்டு கொண்டு கண் இணைகள் என்று கொலோ கழிக்கும் நாளே” என்றார் குலசேகரர். கற்பூர ஆரத்தியோ, தீபமோ காட்டுவது நன்றாக தரிசனம் ஆக வேண்டும் என்பதற்காகத்தான். அப்போது `கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்’ என்றால் என்ன பயன்? கர்ப்பக்ரஹம் இருட்டாக இருக்கும். கற்பூரம் காண்பிக்கும் போது பகவானை நன்றாகச் சேவிக்க வேண்டும். அப்போது கண்ணை மூடிக் கொண்டிருக்கக் கூடாது. தரிசனம் கண்குளிர சேவித்து வீட்டில் போய்
தியானம் செய்ய வேண்டும்.

?அபரான்னகாலம் என்கிறார்களே? அந்த நேரம் எதற்கு பார்க்கிறார்கள்?
– வித்யா மூர்த்தி, கோவை.

பகல் பொழுதை ஐந்து பாகமாக பிரித்து அதில் நான்காம் பாகத்தில் உள்ள கால அளவே அபரான்னம் எனப்படும் பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற முன்னோர் வழிபாட்டை வீடு மற்றும் புனித ஸ்தலங்களில் ‘‘அபரான்னகாலம்’’ என அழைக்கப்படும். பிற்பகல் 1:12 முதல் 3:36 வரையிலான காலத்தில் செய்யவேண்டும். இந்த அபரான்னகாலத்தில்தான் பித்ருக்கள் பூமிக்கு வந்து நமது வழிபாட்டை ஏற்கிறார்கள். நாம் அளிக்கும் எள், தண்ணீரை உணவாக அருந்தி நம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.

?இறைவன் நாமத்தை காலையில் குளித்துவிட்டு சொல்ல வேண்டுமா? அல்லது சாயங்காலம் விளக்கு வைத்துத்தான் சொல்ல வேண்டுமா? எப்போது சொல்லலாம்?
– பிரேமா ஹரிஹரன்,திருவானைக்காவல் – திருச்சி.

எப்பொழுதும் சொல்லலாம். கபீர்தாசர் ஒரு அற்புதமான பதில் சொல்லி இருக்கின்றார். குழந்தை தாய்ப்பாலைக் குடித்துக் கொண்டிருக்கும். அப்படியே தூங்கிவிடும். ஆனால் அந்தத் தூக்கத்தில்கூட தாய்ப்பாலைப் பருகிக் கொண்டிருக்கும். அப்படித் தூக்கத்திலும் மறக்காமல் தாய்ப்பாலைப் பருகும் குழந்தையைப் போல, எல்லா நேரத்திலும் இறைவன் திருநாமத்தைச் சொல்ல வேண்டும் என்பர். இன்னொரு மகான் இன்னும் எளிமையாகச் சொன்னார். “நீ எப்பொழுதெல்லாம் மூச்சு விடுகிறாயோ, அப்படி மூச்சுவிடும் போது இறைவன் திருநாமத்தைச் சொல்’’ என்றார்.

 

The post கிரக தோஷங்கள் என்ன செய்யும்? அதை நீக்கிக் கொள்ள வழி என்ன? appeared first on Dinakaran.

Read Entire Article