‘‘மாம்பழ கட்சிக்காரங்க ரொம்பவே அப்செட்டில் இருக்கிறதா பேசிக்கிறாங்களே எங்கே என்று தெரியுமா..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தில் மாம்பழ கட்சிக்காரங்க, ரொம்ப அப்செட் மூடில் இருக்கிறார்களாம்.. சமீபத்தில அந்த கட்சி தலைவரு வந்தபோதுகூட நிர்வாகிகள் பலர் ஆப்சென்ட் ஆகி விட்டார்களாம்.. இதனால, ஓட்டலில் வரவேற்க கூட ஆள் இல்லையாம்.. இதற்கெல்லாம் காரணமாக, ஆறுமுக கடவுள் பெயரை கொண்ட நிர்வாகி ஒருத்தரு, தன்னிச்சையாக செயல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் சிலரை நியமிச்சதுதான் என்கிறார்கள். அவராகவே சிலரை நீக்கிட்டு, புதிதாக வேறு நபர்களை நியமிச்சி இருக்காரு.. நீக்கப்பட்டவர்களுக்கு இதுபற்றி எதுவும் தெரிவிக்கப்பட வில்லையாம்.. அதுமட்டுமல்லாமல், தலைவரு வருகை தொடர்பாக முறையான தகவலும் தெரிவிக்க வில்லையாம். இதனால் அப்செட் மூடுக்கு போன நிர்வாகிகள், தலைவரு இருந்த ஓட்டல் பக்கம் தலை வைக்க வில்லையாம்.. வேறு மாவட்டத்தில இருந்து வந்திருந்த ஒரு சில நிர்வாகிகள்தான், தலைவரு பேட்டி கொடுக்கும்போது சுற்றி நின்று கொண்டிருந்தார்களாம்.. எப்போதாவது ஒரு தடவை தான், இந்த மாவட்டத்துக்கு தலைவரு வருகிறார்.. அப்போது இப்படி சொதப்பி விடுவதாக பழைய கட்சி நிர்வாகிகள் வேதனைப்பட்டு கொண்டார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கஞ்சா செடி வளர்க்க தைரியம் ஊட்டும் காக்கி, வனத்தில் உள்ள கருப்பு ஆடுகளை களையெடுக்கணும் என மலைவாசிகள் வலியுறுத்துகிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கள்ளக்குறிச்சியில் விஷசாராய சம்பவத்துக்கு பின் மலை பகுதியில் தொடர் ரெய்டு நடத்தி வருகிறது காவல்தரப்பு.. இருப்பினும் மலையில் கஞ்சா செடி அவ்வப்போது கண்டுபிடிப்பதும், அழிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் அங்கு வயல்வெளியில் செழித்து வளர்த்திருந்த 104 கிலோ கஞ்சா செடிகளை கண்டறிந்து அழிச்சாங்க.. இவ்வளவு தைரியமா எப்படி கஞ்சா செடி வளர்க்க முடியுதுன்னு நேர்மையான சில அதிகாரிங்க விசாரிச்சப்போ, காக்கி மற்றும் வனத்தில் உள்ள சில கருப்பு ஆடுகள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு அளிக்கும் தைரியம்தான் என்ற தகவல் தெரியவந்ததாம்..
கடந்தாண்டில் ஒரு காக்கியின் துணையோடு இயங்கிய போலி சாராய ஆலை கண்டறியப்பட்டதை ஞாபகப்படுத்தி கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள், கஞ்சா செடி வளர்ப்பதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், அங்குள்ள இளைஞர் சமுதாயம் அழிவுக்கு தள்ளப்படும் என வேதனை தெரிவிக்கிறார்களாம்.. இதனால் உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு விசாரணை நடத்தி இரு துறையிலும் புகுந்துள்ள கருப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டுமென மலைமக்கள் வலியுறுத்தி வர்றாங்களாம்..’’ என்றார்
‘‘குடைச்சல் கொடுப்பது மட்டுமே கிண்டிக்காரருக்கு வேலையா போச்சுன்னு யுனிவர்சிட்டி வாத்தியாருங்க ரொம்ப கோபத்துல இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தேசிய அளவில் சிறந்து விளங்கிட்டு வரும் தமிழக உயர்கல்வித்துறைக்கு, ஏதேனும் ஒரு வகையில குடைச்சல் கொடுக்குறதே கிண்டிக்காரருக்கு வேலையா போச்சுனு மாங்கனி மாவட்ட யுனிவர்சிட்டி வாத்தியாருங்க கோபத்துல இருக்காங்களாம்.. ஸ்டேட் கவர்மெண்ட் பரிந்துரைய ஏத்துக்காததுடன், ஊழல் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவது அங்கு பலருக்கும் அதிருப்திய ஏற்படுத்தியிருக்காம்.. அந்த வரிசையில தற்போது, விசி நியமனத்துக்கான சர்ச் கமிட்டி விவகாரம் மேலும் கோபத்த ஏற்படுத்தியிருக்கு..
உயர்கல்வி நிறுவனங்கள் பின்பற்றணும்னு யூஜிசி சில வழிகாட்டுதல்கள சொன்னாலும், அந்தந்த யுனிவர்சிட்டிகளோட சாசன விதிகள்தான் பிரதானமா பின்பற்றப்படும். அந்த வகையிலதான், மாங்கனி மாவட்ட யுனிவர்சிட்டி சாசன விதிப்படி சர்ச் கமிட்டிய போட்டுருக்காங்க.. ஆனா வேண்டுமென்றே யூஜிசி விதிய காரணம் காட்டி, கிண்டிக்காரர் குற்றம்சாட்டுறாரு.. இதனால, மாணவர்கள் நலன்தான் பாதிக்கப்படும்னு வாத்தியாருங்க ஆதங்கப்படுறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சியில் பிரிந்து சென்றவர்களை குக்கர் கட்சி நிர்வாகிகள் உதவியுடன் மீண்டும் இழுக்க மாஜியானவர் திட்டம் போட்டிருக்கிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தேனிக்காரர் அணியை சேர்ந்த நெற்களஞ்சிய மாஜி அமைச்சர் வைத்தியானவர், குக்கர் கட்சியின் தலைமையிடம் சமீப காலமாக நெருக்கம் காட்டி வருகிறார். மாவட்டத்தில், தங்களிடம் இருந்து இலை கட்சிக்கு சென்ற முக்கிய நிர்வாகிகளை மீண்டும் தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கான அதற்கான வேலைகளும் திரைமறைவில் கச்சிதமாக நடந்து கொண்டு வருகிறதாம்.. இதற்கு, வைத்தியானவர் பெரிய ஸ்கெட்ச் ஒன்று அவரது ஆதரவாளர்களுக்கு போட்டு கொடுத்துள்ளார். பிரிந்து சென்றவர்களை மீண்டும் இழுப்பதன் மூலம், நெற்களஞ்சியத்தில் தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க முடியும் என வைத்தியானவர் ரொம்பவே நம்புகிறாராம்.. தனக்கு துணையாக குக்கர் கட்சி நிர்வாகிகளையும் வைத்து கொண்டு இந்த திட்டத்தை ரகசியமாக செய்து வருகிறதா அவரது நெருங்கிய ஆதரவாளர்களுக்குள் பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பிளாஸ்டிக் கழிவு கொட்டி வந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்தாகப் போகுதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குமரி மாவட்டத்திலும், நெல்லை மாவட்டத்திலும் சமீபகாலமாக மருத்துவ கழிவுகளையும், இறைச்சி கழிவுகளையும் கொட்டுவது அதிகரித்த நிலையில் இக்கழிவுகள் கொண்டுவந்து கொட்டிய நிறுவனம் திருவனந்தபுரம் மாநகராட்சியின் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனம் என்பது தெரியவந்துள்ளதாம்.. திருவனந்தபுரம் மாநகரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அதனை சிமென்ட் கம்பெனிகளுக்கு அனுப்பி வைக்க இந்த நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாம்.. ஆனால் இந்த நிறுவனம் மாநகராட்சிக்கு தெரியாமல் வேறு தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அந்த மருத்துவ கழிவுகளை வாகனங்களில் ஏற்றி மாநில எல்லை பகுதியில் கொண்டு வந்து வேறு துணை ஒப்பந்த நிறுவனங்களிடம் வழங்கி அந்த வாகனங்கள் தமிழ்நாட்டின் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்து கழிவுகளை கொட்டி சென்றுள்ளன. தமிழ்நாடு அரசு கொடுத்த நெருக்கடிகளை தொடர்ந்து திருவனந்தபுரம் மாநகராட்சி விசாரணை நடத்தி இதனை கண்டுபிடித்துள்ளதாம்… தற்போது விதிகளை மீறி செயல்பட்டதற்காக அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய திருவனந்தபுரம் மாநகராட்சி திட்டமிட்டு இருக்கிறதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post கிண்டிக்காரரால் மாணவர் நலன் பாதிக்கப்படுவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.