சென்னை,
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் பணியில் இருந்த டாக்டர் பாலாஜியை கடந்த மாதம் 13ம் தேதி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலில் படுகாயம் அடைந்த டாக்டர் பாலாஜி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை சீரானதால் கடந்த மாதம் 19ம் தேதி வீடு திரும்பினார்.
இதற்கிடையே, டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞர் விக்னேஷ் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேஷ் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு கடந்த மாதம் 22ம் தேதி நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விக்னேஷுக்கு ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, வழக்கில் இருந்து ஜாமீன் கோரி விக்னேஷ் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இளைஞர் விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். விக்னேஷ் தினமும் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.