கிணற்றுக்குள் விழுந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய புதுமண தம்பதி

1 month ago 7

கொச்சி:

கேரள மாநிலம் ஆலுவா நகரில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிகிறார். இவரது மனைவி விஸ்மயா. இவர் கல்லூரியில் விவசாயம் சார்ந்த படிப்பு படித்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகின்றன.

இந்நிலையில், மூன்று நாள் ஆயுத பூஜை விடுமுறை தொடங்கிய நிலையில், விஸ்மயா விடுப்பு எடுத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கார்த்திக்கும் அங்கு சென்றுள்ளார். அங்கிருந்து வெள்ளிக்கிழமை மாலையில் கணவன்-மனைவி இருவரும் காரில் ஆலுவாவுக்கு புறப்பட்டனர்.

இரவு 9 மணியளவில் எர்ணாகுளம் மாவட்டம் கொளஞ்சேரி அருகே வந்தபோது, சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த ஒரு பள்ளத்தில் கார் இறங்கி ஏறியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த கிணற்றின் சுற்றுச் சுவரை உடைத்துக்கொண்டு தலைகீழாக கிணற்றுக்குள் விழுந்தது. 15 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 5 அடி வரை தண்ணீர் தேங்கியிருந்தது.

காருடன் கிணற்றுக்குள் விழுந்த இருவரும் தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்றிருந்தவர்கள் ஓடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் குறைவாக இருந்ததால் கார் முழுவதுமாக மூழ்கவில்லை. காருக்குள் இருந்த இருவரும் வெளியேறிவிட்டனர். பின்னர் மேலே இருந்தவர்கள் ஏணி மூலம் இருவரையும் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் எந்த காயமும் இன்றி இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

Read Entire Article