செங்கம், ஏப். 2: செங்கம் அடுத்த பேயாலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருக்கு சொந்தமாக வனப்பகுதி அருகே விவசாய நிலம் உள்ளது. அருகாமையில் உள்ள கிணற்றில் இரவு நேரத்தில் தண்ணீர் தேடி வந்த காட்டுப்பன்றி தவறி விழுந்து இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வன காப்பாளர் அரவிந்தன் கிணற்றில் இறங்கி இறந்த பன்றியின் உடலை மீட்கமுயன்றபோது மேலே ஏறி வர முடியாமல் பல மணி நேரம் நீரில் போராடி வருவதாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று கிணற்றில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த வன காப்பாளர் அரவிந்தன் என்பவரை கிணற்றிலிருந்து பாதுகாப்புடன் மீட்டனர். இதனைத் தொடர்ந்து கிணற்றில் இறந்து கிடந்த காட்டுப்பன்றி உடலை மீட்டனர். வன காப்பாளர் அரவிந்தன் வன அலுவலர் உத்தரவின் பேரில் இறந்த காட்டுப்பன்றி உடலை கால்நடை உதவி மருத்துவரை அழைத்து உடல் கூறு ஆய்வு செய்து வனப்பகுதியில் புதைத்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
The post கிணற்றில் இறந்து கிடந்த காட்டுப்பன்றியை மீட்க முயன்றபோது மேலே ஏறி வரமுடியாமல் நீரில் போராடிய வன காப்பாளர் appeared first on Dinakaran.