'கிங் - கோமாளி' விராட் கோலியை விமர்சித்த ஆஸி. ஊடகம்.. என்ன நடந்தது..?

6 months ago 18

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆனது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 140 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் அடித்துள்ளது. பண்ட் 6 ரன்களுடனும், ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 310 ரன்கள் பின்தங்கி உள்ள நிலையில் நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த போட்டியின் முதல் நாளான நேற்று ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய சாம் கான்ஸ்டாஸ் 60 ரன்கள் அடித்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தார்.

அவர் பேட்டிங் செய்தபோது 10வது ஓவரின் முடிவில் பந்தை கையில் எடுத்துக்கொண்டு ஓவர் மாற்றுவதற்காக விராட் கோலி நடந்து சென்றார். அதே பாதையில் எதிர்புறம் கான்ஸ்டாஸ் நடந்து வந்தார். அப்போது இருவரும் தங்களுடைய தோளில் நேருக்கு நேராக கொஞ்சம் பலமாக இடித்துக் கொண்டார்கள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. உடனடியாக அருகில் இருந்த உஸ்மான் கவாஜா மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து நிறுத்தினார்கள்.

இருப்பினும் அந்த இடத்தில் விராட் கோலி வேண்டுமென்றே அவர் மீது மோதியதாக அறிவித்துள்ள ஐ.சி.சி. அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமும், ஒரு கருப்பு புள்ளி வழங்கியும் தண்டனை விதித்தது.

மேலும் அறிமுக வீரரிடம் விராட் கோலி இப்படி நடந்து கொண்டது குறித்து பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் பிரபல ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று விராட் கோலியை 'கோமாளி' என விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு இந்திய முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த தொடர் ஆரம்பிக்கும் முன்னர் ஆஸ்திரேலியாவில் விராட் கோலிக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளதால் அங்குள்ள அனைத்து ஊடகங்களும் தொலைக்காட்சி நிறுவனங்களும் விளம்பரங்களில் அவரை முன்னிலைப்படுத்தின.

குறிப்பாக தற்போது 'கோமாளி' என விமர்சித்துள்ள அதே ஊடகம்தான் விராட் கோலியை 'கிங்' என குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது.

ஆஸ்திரேலிய ஊடகத்தின் இந்த செயல் இந்திய ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article