பிரயாக்ராஜ்: கும்பமேளாவில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 18 கூடாரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. உபி,பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடைபெறும் மகா கும்பமேளா கடந்த 13ம் தேதி தொடங்கியது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 7 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். கும்பமேளாவின் 7வது நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு செக்டர் 19ல் காஸ் சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறியது. இதில் 18 தற்காலிக கூடாரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையின் 15 வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீயணைப்பு படையினர் உடனடியாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். அருகில் உள்ள கூடாரங்களில் இருந்தவர்கள் பலர் மீட்கப்பட்டனர்.
இதில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று தீயணைப்பு துறை அதிகாரி பிரமோத் சர்மா தெரிவித்தார். முதல்வர் யோகி ஆதித்யநாத் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில்,‘‘தீ விபத்து ஏற்பட்டதும், சம்பவ இடத்துக்கு செல்லுமாறு உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். பிரதமர் மோடி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்டறிந்தார்’’ என்றனர்.
The post காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து 18 கூடாரங்கள் எரிந்து சாம்பல் appeared first on Dinakaran.