'காஷ்மீர் செல்ல நினைப்பவர்கள் கண்டிப்பாக செல்லுங்கள்' - அண்ணாமலை

11 hours ago 2

சென்னை,

காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், காஷ்மீர் செல்ல நினைப்பவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டும் என தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"அனைத்து மதங்களும் ஒன்று என நினைக்கக் கூடிய மனிதன் நான். ஆனால் பயங்கரவாதிகள் அவ்வாறு நினைக்கவில்லை. 26 அப்பாவி மக்களை அவர்களின் மதத்தை கேட்டு படுகொலை செய்திருக்கிறார்கள்.

இந்த தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி தனது 2 நாள் சவுதி அரேபியா சுற்றுப்பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு திரும்பி வந்துள்ளார். அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தற்போது இந்தியாவில் இருக்கிறார். இத்தகைய நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கு நமது அரசு தகுந்த நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கும். அதே சமயம், காஷ்மீர் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக செல்லுங்கள். கோழைத்தனமான தாக்குதலுக்கு நாம் பயந்துவிடக் கூடாது. நமது வேலையை நாம் செய்துகொண்டே இருப்போம்.

அரசியல் பேசுபவர்கள் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 9-ந்தேதி நரேந்திர மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்றபோது, அன்றைய தினமே காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்தியாவில் அமைதியை குலைக்க வேண்டும் என்பதற்காக தாக்குதல் நடத்துகிறார்கள்.

காஷ்மீரை பொறுத்தவரை சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகும் கூட, அங்கு நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது. இந்த துரதிருஷ்டவசமான நிகழ்வு நடந்துள்ள சூழலில், இந்தியர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அரசு இயந்திரம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதில் நமது தலைவர்கள் அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

Read Entire Article