சென்னை: காஷ்மீர் சுற்றுலா சென்ற அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து உள்ளதற்கு பொறுப்பு ஏற்று, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: காஷ்மீரில் நடந்த கொடூரம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டது என்பதை இந்த சம்பவம் உறுதிப்படுத்துகிறது. ஆர்டிக்கிள் 370வது பிரிவை அகற்றிவிட்டால், காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் இருக்காது என்று பாஜ தொடர்ந்து கூறிவந்தது. 370வது பிரிவு நீக்கிவிட்டோம், பயங்கரவாதத்தை ஒடுக்கி விட்டோம். இனிமேல் சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக, காஷ்மீர் செல்லலாம் என்று கூறிவந்தனர். ஒன்றிய அரசு கூறியதை நம்பி போன சுற்றுலா பயணிகள், இப்போது படுகொலை ஆகி இருக்கின்றனர். எனவே இதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் பொறுப்பு. இதனால் அமித்ஷா உடனடியாக, அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
The post காஷ்மீர் சுற்றுலா பயணிகள் கொலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.