சென்னை: காஷ்மீரில் பயின்று வரும் தமிழக மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவம், எல்லைக்கோட்டருகே உள்ள பயங்கரவாத முகாம்களின் மீது தாக்குதலை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக ஜம்மு – காஷ்மீர் மாகாணத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், அங்கு உள்ள பல கல்வி நிறுவனங்களில், குறிப்பாக ஸ்ரீநகரில் உள்ள தேசிய ஆடைத் தொழில்நுட்ப நிறுவனம் (NIFT) மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 41 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில், அவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்புவதாகவும், அதற்கான உதவியை தமிழக அரசிடம் கடிதம் மூலமாக கோரியுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின் பேரில், தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நல வாரியம், தலைவர் கார்த்திகேயா சிவசேனபதி அவர்களின் தலைமையிலும், உறுப்பினர் செயலாளர் வள்ளலார், ஐ.ஏ.எஸ் அவர்களின் ஒருங்கிணைப்பிலும், மாணவர்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுத்து வருகிறது.
ஸ்ரீநகர் NIFT இயக்குநரும், உதவி இயக்குநரும் நேரில் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், காஷ்மீர் பூர்வீகத்தையும் தமிழ்நாடு கேடரில் பணியாற்றும் அதிகாரியுமான ஆப்தாப், ஐ.ஏ.எஸ். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வுடன் மாணவர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்படுவார்கள் என அவர் உறுதியளித்துள்ளார்.
தமிழக முதன்மைச் செயலரும் மாணவர்களுடன் நேரடியாக பேசித் தகவல்களை பெற்றுள்ளார். முதல்வர் தொடர்ந்து நிலைமையை நன்கு கண்காணித்து வருகிறார். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவலையின்றி இருக்க அரசின் அனைத்து முயற்சிகளும் தொடரவுள்ளதாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
உதவி அல்லது தொடர்புக்கு:
• தொடர்பு/வாட்ஸ்அப்: 75503 31902
• டோல்-ஃப்ரீ எண்: 80690 09901
• மிஸ்ட்கால் எண்: 80690 09900
• Email: [email protected]
The post காஷ்மீரில் பயின்று வரும் தமிழக மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!! appeared first on Dinakaran.