காஷ்மீரில் தீவிரவாதிகள் வேட்டைக்காக செல்ல சேலத்தில் விமானப்படை வீரர்கள் திடீர் பயிற்சி

3 hours ago 3

சேலம்: சேலத்தில் விமானப்படை வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டைக்காக எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரலாம் என்ற நிலையில், கோவை சூலூரிலிருந்து 3 ஹெலிகாப்டரில் வந்து ஒத்திகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இந்திய விமானப்படை பயிற்சி தளம் செயல்பட்டு வருகிறது. இங்கு, விமானப்படைக்காக தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அங்குள்ள பைஸ்ரன் பள்ளத்தாக்கு பகுதியிலேயே தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு வாகனங்கள் எளிதில் செல்ல முடியாது என்பதால், முழுக்க முழுக்க விமானப்படை வீரர்களே தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், பல்வேறு பகுதியிலிருந்து விமானப்படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, கோவை சூலூர் விமானப்படை பயிற்சி மையத்தில் உள்ள வீரர்களும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இதற்காக 30 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வழக்கமான பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், மலைப்பாங்கான இடங்களில் ஹெலிகாப்டரில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதற்கான பயிற்சியும் தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, நேற்று எந்தவித முன்னறிவிப்புமின்றி 3 ஹெலிகாப்டர்களில் 30க்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் (ஜவான்கள்) சேலம் வந்தனர். அனைவரும் ஒரே நேரத்தில் மல்லூர் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஹெலிபேடு இறங்குதளத்தில் வந்திறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு ஹெலிகாப்டர்கள் மூலமாகத்தான் செல்ல முடியும். இதையடுத்து, சூலூரில் உள்ள இந்திய விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் வந்து சேலத்தில் பயிற்சி எடுத்துள்ளனர். தீவிரவாதிகள் தேடுதல் வேட்டைக்காக இவர்களுக்கு எப்போதும் வேண்டுமானாலும் அழைப்பு வர வாய்ப்புள்ள நிலையில், ஒத்திகையில் ஈடுபட்டதாக தெரிகிறது என்றனர்.

The post காஷ்மீரில் தீவிரவாதிகள் வேட்டைக்காக செல்ல சேலத்தில் விமானப்படை வீரர்கள் திடீர் பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article