டெல்லி : காஷ்மீரின் சம்பா வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து வரலாறு காணாத தாக்குதல் தொடர்வதால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. நேற்று இரவு ஜம்மு – காஷ்மீர் விமான நிலையம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பதன்கோட், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரை குறிவைத்து பாக். படைகள் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இதை இந்தியா விமானப்படை அதிரடியாக செயல்பட்டு நடுவானில் சுட்டு வீழ்த்தியது. 4 பாக். விமானங்கள், 8 ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. குறிப்பாக ஜம்மு – காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளான பூஞ்ச், ரஜோரியில் அதிகாலையில் பயங்கர வெடிகுண்டு சப்தம் கேட்டது.
இந்த நிலையில், காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை பிஎஸ்எஃப் எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படை முறியடித்துள்ளது. நேற்று இரவு சுமார் 12 தீவிரவாதிகள் சம்பா மாவட்ட சர்வதேச எல்லை மூலம் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதனை கண்டறிந்த எல்லைப் பாதுகாப்பு படை, சுமார் 7 தீவிரவாதிகளை கொன்றது. எஞ்சிய தீவிரவாதிகள் தப்பிச் ஓடினர். சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும் ஜெய்ஸ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே காஷ்மீர் மாநிலம் ஊரியில் உள்ள மொஹுரா அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் கார் மீது குண்டு பாய்ந்ததில் நர்கீஸ் பேகம் என்பவர் பலியானார். மேலும், காயமடைந்த ஹஃபீசா என்ற மற்றொரு பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post காஷ்மீரின் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 7 ஜெய்ஸ் – இ – முகமது தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்புப் படை!! appeared first on Dinakaran.