காவிரி, பவானி ஆறுகளில் கழிவுகள் கலப்பதை தடுக்க ரூ.15.79 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

1 day ago 2

*கட்டுமான பணிகள் மும்முரம்

பவானி : பவானி நகராட்சி பகுதியில் வெளியேறும் கழிவுநீர் நேரடியாக பவானி மற்றும் காவிரி ஆறுகளில் கலப்பதை தடுக்கும் வகையில் ரூ.15.79 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி கடந்த 1978ம் ஆண்டு முதல் இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. 27 வார்டுகளை கொண்ட இந்த நகராட்சி 2.17 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்டது. கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 39,225 கொண்டதாகவும், தற்போதைய மக்கள் தொகை உத்தேசமாக 42,575 இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் வகையில், புதிய பஸ் நிலையம் அருகே காவிரி ஆற்றில் தலைமை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, நபர் ஒன்றுக்கு, தினமும் 101 லிட்டர் என மொத்தம் 4.2 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நகராட்சி, பவானி மற்றும் காவிரி ஆறுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இரு ஆறுகளிலும் நேரடியாக கலந்து வருகிறது. இதனால், தண்ணீர் மாசடைவதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்றும் வகையில் நீண்ட காலமாக திட்டமிடப்பட்டு வந்தது.

தமிழ்நாட்டில் மிகச்சிறிய நகராட்சிகளில் இரண்டாவதாக உள்ள இந்த நகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில் பல்வேறு இடர்பாடுகள் இருந்து வந்தது. இந்நிலையில், ஸ்வட்ச் பாரத் மிஷன் 2.0 திட்டத்தில் விரிவான, மேம்படுத்தப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு, வல்லுநர் குழுவை கொண்டு ஆய்வு செய்யப்பட்டது.

இதில், பவானி நகராட்சி நிர்வாகம் விநியோகிக்கும் 4.2 மில்லியன் லிட்டர் குடிநீரில், 80 சதவீதம் கழிவு நீராக வெளியேறுவது கண்டறியப்பட்டது. நாளொன்றுக்கு 3.36 மில்லியன் லிட்டர் கழிவு நீர் காவிரி, பவானி ஆறுகளில் நேரடியாக கலந்து வருகிறது. இதனால், கழிவு நீர் ஆற்றில் கலக்கும் இடங்களை கண்டறிந்து தடுத்து, குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்தல் மற்றும் சுத்திகரிப்பு செய்து, மீண்டும் காவேரி ஆற்றில் வெளியேற்றிட ரூ.15.79 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்டம் வகுக்கப்பட்டது.

பவானி நகராட்சியின் பூகோள ரீதியிலான நிலவியல் அமைப்பு ஆய்வு செய்யப்பட்டதில், புதிய பஸ் நிலையம் அருகே உரக்கிடங்கு வளாகம் மற்றும் தேவபுரம் மயான வளாகம் என இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இரு இடத்திலும் வல்லுநர் குழு நடத்திய விரிவான ஆய்வில், அனைத்து வகையிலும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தேவபுரம் மயான வளாகம் சிறந்தது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெறப்பட்டது. கடந்த 2024 செப்டம்பர் மாதம் இத்திட்ட பணிகள் தொடங்கப்பட்டு, ஆற்றின் கரையோர பகுதிகளில் குழாய்கள் பதித்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பள்ளிபாளையம் நகராட்சிக்கு ரூ.1.50 கோடி அபராதம்

சாய மற்றும் சாக்கடைக் கழிவுகள் காவிரி ஆற்றில் நேரடியாக கலந்து வந்ததால், இதுகுறித்த தானாக வழக்கு பதிவு விசாரித்த தேசிய பசுமைத்தீர்ப்பாயம் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா தலமாகவும், புகழ்பெற்ற வழிபாட்டுத்தலமாகவும் விளங்கும் பவானியில் காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறை உள்ளது. இரு ஆறுகளில் கழிவுகளும் ஆற்றில் கலந்து கூடுதுறையில் சங்கமிப்பதால், புனித நீராட ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கழிவுகள் கலப்பால் பவானி நகராட்சிக்கு அபராதம் விதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொதுமக்கள் எதிர்ப்பு

நகராட்சி மயான வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட 12-வது வார்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் நதி நீரை பாதுகாக்கும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.

தோல்வியில் முடிந்த தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டம்

பவானி நகராட்சி பகுதியில் வெளியேறும் கழிவுநீரை பாதாள சாக்கடைத்திட்டம் மூலம் சேகரித்து, குழாய்கள் மூலம் சுமார் 3 கி.மீ. தொலைவில் குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வேளாண் துறைக்கு சொந்தமான விதைப்பண்ணை நிலத்தில் 8.20 ஏக்கர் நிலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து வெளியேற்ற திட்டமிடப்பட்டது.

இத்திட்டத்துக்கு நகராட்சி பகுதியில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு, கழிவுநீர் சேகரிப்பு மையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணியும் நடைபெற்றது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, பவானி நகராட்சிக்கு ஒப்படைத்து பராமரிக்க உத்தேசிக்கப்பட்டது. இதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பலகட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்டது.

மயான பயன்பாட்டிற்கு 50 சென்ட் நிலம் ஒதுக்கீடு

பவானி காவிரிக்கரை, தேவபுரம் மயான வளாகம், மொத்தம் 1.97 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 13 சென்ட் பரப்பில் நுண் உர மையம், 24 சென்ட் பரப்பில் எரிவாயு தகனமேடை அமைந்துள்ளது. பாக்கியுள்ள 1.60 ஏக்கர் நிலத்தில் சுத்திகரிப்பு நிலையம் 1.10 ஏக்கர் (4472 ச.மீ) கட்டப்படுகிறது. மீதமுள்ள அரை ஏக்கர் (50 சென்ட்) நிலம் மயான பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படுகிறது. எரிவாயு தகனமேடை பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளதால் மயான பயன்பாடுக்கு 50 சென்ட் நிலம் போதுமானதாக கருதப்படுகிறது.

 

The post காவிரி, பவானி ஆறுகளில் கழிவுகள் கலப்பதை தடுக்க ரூ.15.79 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் appeared first on Dinakaran.

Read Entire Article