காவிரி நீர் போதிய அளவு வராததால் கருகும் நிலையில் இளம் நெற்பயிர்கள்

6 hours ago 2

*அதிக தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

*பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கீழ்வேளூர் : கீழ்வேளூர் பகுதிக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் குறுவை நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கூடுதலாக தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காவிரி டெல்டா பாசனத்திற்கு இந்த ஆண்டு மேட்டூர் அணையை ஜுன் 12ம் தேதியும், கல்லணையை ஜுன் 15ம் தேதியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையடுத்து கடைமடை பகுதிக்கு கடந்த 5 நாட்களுக்கு முன் பாசனத்திற்காக தண்ணீர் வந்து சேர்ந்தது. இந்நிலையில் கீழ்வேளூர் பகுதிக்கு பாசனம் வழங்கும் ஓடம்போக்கியாறு, கடுவையாறு போன்றவற்றில் தண்ணீர் குறைந்த அளவே வருகிறது. இதனால் வாய்க்கால்களில் வரும் தண்ணீர் வயலில் பாயும் அளவிற்கு வராமல் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது.

தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை சாகுபடி இலக்கை தாண்டி கூடுதலாக 100 சதவீதம் குறுவை சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு மூலம் 110 நாள் வயதுடைய நெல ரகங்களான ஆடுதுறை53, ஆடுதுறை57, ஏ.எஸ்.டி.16, டி.ஆர்.எஸ்.(திருப்பதி)5, கோ55, ஏ.டி.டி.45 போன்ற நெல் ரகங்களை விவசாயிகள் நேரடி நெல்விதைப்பு மூலம் குறுவை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கீழ்வேளூர் பகுதியில் 12 நாட்களுக்கு முன் பெய்த மழையில் சுமார் 40 சதவீத வயல்களில் விதை நெல் முளைத்து 10 நாள் பயிராக உள்ளது.

இந்த வயல்களில் கோடை உழவு செய்யப்பட்ட புழுதியில் நேரடி நெல் விதைப்பு மூலம் விதைக்கப்பட்டு முளைத்த நெற்பயிர் வயலில் ஈரப்பதம் இல்லாததால் வாடி வருகிறது. இன்னும் சில நாட்களில் மழை பெய்தோ அல்லது தண்ணீர் பாய்ச்சினாலோ தான் இந்த இளம் நெற்பயிரை காப்பாற்ற முடியும்.

இல்லையென்றால் முளைத்த இளம் நெற்பயிர்கள் கருகும் அபாயத்தில் உள்ளது. மேலும் நேரடி நெல் விதைப்பு மூலம் சுமார் 60 சதவீத விவசாயிகள் குறுவை நெல் விதைத்து தண்ணீர் இல்லாமல் முளைக்காமல் வயலிலேயே புழுதியில் 10 நாட்களுக்கு மேலாக விதைகள் உள்ளது.

குறுவை சாகுபடிக்கு முன்கூட்டிய காலத்தில் நெல் முளைத்தால் பருவ மழைக்கு முன் அறுவடை செய்து தாளடி சாகுபடி செய்யலாம். இந்நிலையில் மழை இல்லாததாலும், மேட்டூர் அணை தண்ணீரும் கீழ்வேளூர் பகுதியில் போதிய அளவு கிடைக்காததாலும் முளைத்த நெற்பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, பொதுப்பணித்துணை அதிகாரிகள் கீழ்வேளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு பாசன நீரை அதிக அளவில் திறந்து விட்டு முளைத்துள்ள இளம் நெற்பயிர்களை காப்பாற்றவும், வயலில் நேரடி நெல் விதைப்பு தெளித்துள்ள நெல் விதைகள் முளைக்கவும் கூடுதலாக தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் எதிபார்த்து காத்திருக்கின்றனர்.

The post காவிரி நீர் போதிய அளவு வராததால் கருகும் நிலையில் இளம் நெற்பயிர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article