சென்னை: காவல்துறையை திட்டமிட்டு அவமானப்படுத்துகிறார். பெண்களுக்கு அச்சத்தை உண்டாக்கும் வகையில் எடப்பாடி பேசுகிறார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குற்ற சம்பவ எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தாலே எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். தமிழ்நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகள் வந்து மக்களின் வாழ்க்கை மேம்பட்டு வருகிறது.
இதை எல்லாம் கண்டு பொறாமைப்படும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடு என மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சி காலத்தில் பூஜ்ஜிய நேரத்தில் எழுப்பும் பிரச்னைகளுக்கு அரை மணி நேரம் முன்னதாக தரப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் சட்டப்பேரவை தொடங்கும் போது எந்த பிரச்னை என கூறாமல் சட்டம் ஒழுங்கு பிரச்னை என திட்டமிட்டு பிரச்னையை உண்டாக்குகிறார்.
காவலர் தோட்டத்தில் இருந்தபோது உறவினர்களுக்கும் காவலருக்கும் நடந்த பிரச்னை. செயின் பறிப்பு குற்றவாளிகளை 3 மணி நேரத்தில் பிடித்தது காவல்துறை. காவல்துறையை திட்டமிட்டு அவமானப்படுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி, பரமக்குடி கலவரங்கள் நடைபெற்றது. தற்போது திமுக ஆட்சியில் கலவரங்கள் இல்லாமல் அமைதி பூங்காவாக உள்ளது தமிழ்நாடு. குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்கிறோம்.
சிவகங்கையில் மருத்துவர் கடத்தப்பட்டார் என்ற பொய்யான தகவலை கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 49% பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதால் பெண்களுக்கு அச்சத்தை உண்டாக்கும் வகையில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. காவல்துறை மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதால் தான் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது புகார் அளிக்க பொதுமக்கள் முன்வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
The post காவல்துறையை திட்டமிட்டு அவமானப்படுத்துகிறார் பெண்களுக்கு அச்சத்தை உண்டாக்கும் வகையில் எடப்பாடி பேசுகிறார்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.