சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, குற்றங்களை கண்டுபிடிப்பது, சட்டங்களை நடைமுறைப்படுத்துவது, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள்மீது உடனடி நடவடிக்கை எடுப்பது, மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது ஆகியவை காவல்துறையின் இன்றியமையாத பணிகளாகும். ஆனால், கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சியில் மேற்படி பணிகளில் மிகப் பெரிய சுணக்கம் ஏற்பட்டதன் காரணமாக அன்றாடம் பல கொலைகள், தற்கொலைகள், கொள்ளைகள், பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில், தி.மு.க. அரசின் ஏவல் துறையாக செயல்படும் காவல்துறையின் அலட்சியப் போக்கு காரணமாக சென்னை, ஆர்.கே. நகர் காவல் நிலையத்தின் முன் ராஜன் என்கிற பட்டறை தொழிலாளி தீக்குளித்து உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராஜன் என்பவர் ஸ்டீல் பட்டறையில் பணியாற்றி வந்ததாகவும், அங்கு அவருக்கும் வேறு ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டு மனஉளைச்சலில் இருந்த நிலையில் மது அருத்தியதாகவும், அங்கு அவரை ஏற்கெனவே தகராறில் ஈடுபட்டவரும், வேறு ஒருவரும் தாக்கியதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதனைப் பதிவு செய்ய காவல்துறை மறுத்த நிலையில் அன்று இரவு காவல் நிலையம் முன்பு தீக்குளித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், ராஜன் என்பவரின் உறவினர்கள் கூற்று வேறுவிதமாக உள்ளது. கடந்த மாத இறுதியில், ராஜன் என்பவர் மது அருத்திவிட்டு தெருவில் நின்று கொண்டிருந்ததாகவும், இதனை வீடியோ எடுத்த காவலர் ஒருவர் அவரிடம் 3,000 ரூபாய் பணம் கேட்டதாகவும், பணம் இல்லை என்று கூறியதால் அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் அவரது உறவினர்கள் காவல் நிலையம் சென்று ராஜனை இல்லத்திற்கு அழைத்து வந்ததாகவும், இதனைத் தொடர்ந்து ராஜன் வேலை செய்யும் பட்டறைக்குச் சென்று காவல்துறையினர் அவரை அவமானப்படுத்தியதாகவும், இதன் காரணமாக ஆர்.கே. நகர் காவல் நிலையம் முன்பு அவர் தீக்குளித்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எப்படிப் பார்த்தாலும், காவல்துறையினரின் நடவடிக்கைதான் பட்டறை தொழிலாளி உயிரிழப்புக்கு காரணம் என்பது தெளிவாகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ராஜன் தீக்குளித்ததற்கு தி.மு.க. அரசின் திறமையற்ற நிர்வாகமும், காவல்துறையை தி.மு.க. அரசு சுதந்திரமாக செயல்பட விடாததும்தான் காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
முதல்-அமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, ஆர்.கே. நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்து உயிரிழந்த பட்டறை தொழிலாளியை அந்த நிலைமைக்கு ஆளாக்கியது யார் என்பதை கண்டறிந்து, அதற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களிலாவது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.