'காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல' - செல்வப்பெருந்தகை

5 days ago 5

சென்னை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்ற இளைஞர், போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 6 காவலர்களை மாவட்ட எஸ்.பி. பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல என்று காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருப்புவனம் காவல்துறையினர் அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையின் போது, காவலாளி அஜித் குமார் இறந்து விட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக, 6 தனிப்படை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

காவலாளி அஜித் குமாரின் உறவினர்கள் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதால்தான் இறப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். சமீப காலமாக, லாக்அப் இறப்பு நடைபெறுவது மிகவும் வேதனையளிக்கிறது. காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல, அவர்களின் செயல் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.

வரும்காலங்களில் இதுபோன்ற துர்ச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளவேண்டும். இவ்விஷயம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முறையான ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article