காவல் நிலையம் முன் பெண் இன்ஜினியர் தற்கொலை; காத்திருப்போர் பட்டியலுக்கு பெண் இன்ஸ்பெக்டர் மாற்றம்: தற்கொலைக்கு தூண்டியதாகவும் வழக்கு

1 week ago 3

தஞ்சாவூர்: காவல் நிலையம் முன் பெண் இன்ஜினியர் தற்கொலை செய்த விவகாரத்தில், இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து எஸ்பி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் நடுக்காவேரியை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் தினேஷ்(32), மகள்கள் மேனகா(31), கீர்த்திகா(29). இதில், கீர்த்திகா இன்ஜினியரிங் முடித்து அரசுப்பணி தேர்வுக்காக படித்து வந்தார். இந்நிலையில் அய்யாவு, மதுபாட்டில் வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாகவும், இதையறிந்த மகன் தினேஷ், தனது தந்தையிடம் மதுபாட்டில் விற்க சொன்ன நபர்களிடம் தகராறு செய்ததோடு, அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. கடந்த 8ம் தேதி உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு செல்ல நடுக்காவேரி பேருந்து நிறுத்தத்தில் 2 தங்கைகளுடன் தினேஷ் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார், வழக்கு விசாரணைக்காக இன்ஸ்பெக்டர் அழைத்து வர சொன்னதாக கூறி தினேஷை பைக்கில் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், தினேஷ், தனது தங்கைக்கு 10ம்தேதி (நேற்று) நிச்சயதார்த்தம் என கெஞ்சியதால் புகார்தாரர் புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால் இன்ஸ்பெக்டர் சர்மிளா, இதை ஏற்காமல் பொது இடத்தில் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறி வழக்குப்பதிந்து தினேஷை கைது செய்தார். தினேஷின் தங்கைகள் மேனகா, கீர்த்திகா காவல் நிலையத்துக்கு வந்து அண்ணனை விடுவிக்கும்படி கெஞ்சியுள்ளனர். ஆனால் இன்ஸ்பெக்டர், இருவரையும் சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இருவரும் காவல் நிலையம் முன்பு விஷம் குடித்தனர். போலீசார், இருவரையும் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கீர்த்திகா உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள், பெண் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், தினேஷை விடுவிக்க வேண்டும், ஆர்டிஓ விசாரணை வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சர்மிளா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி எஸ்பி ராஜாராம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

The post காவல் நிலையம் முன் பெண் இன்ஜினியர் தற்கொலை; காத்திருப்போர் பட்டியலுக்கு பெண் இன்ஸ்பெக்டர் மாற்றம்: தற்கொலைக்கு தூண்டியதாகவும் வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article