சென்னை: சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், எழிலகத்தில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறும் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர், நுங்கம்பாக்கம் ரயில்நிலையம் நிலையத்தில் வெடி குண்டு வைத்து இருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதுகுறித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்படி வெடி குண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் எழிலகம் மற்றும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 1 மணி நேரத்திற்கு மேல் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது.பின்னர் எழிலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் விசாரணை நடத்திய போது, பாலாஜி என்பவர் வெடி குண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
உடனே போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் முதல்வர் செல்லும் கான்வாயில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி அந்த நபர் இணைப்பை துண்டித்துவிட்டார். பிறகு மற்றொரு அழைப்பில் வந்த மர்ம நபர், ஓட்டேரியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இந்த அழைப்புகளின் படி இதுவும் புரளி என தெரியவந்தது.
அதைதொடர்ந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தனித்தனி அழைப்புகளாக 4 பேர் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர். அதில், முதல்வர் கான்வாய் செல்லும் பாதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தென்காசியை சேர்ந்த முத்துச்செல்வன் என்று தெரியவந்தது. அவரை நுங்கம்பாக்கம் போலீசார் தென்காசி போலீசார் உதவியுடன் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முத்துச்செல்வனை சென்னைக்கு அழைத்து வர நுங்கம்பாக்கம் போலீசார் தென்காசி விரைந்துள்ளனர்.
The post காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடுத்தடுத்து போன் செய்து எழிலகம், அமைச்சர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்: 2 பேர் கைது போலீசார் விசாரணை appeared first on Dinakaran.