கடலூர்,
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டம் முதுநகர் காவல் நிலையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, காவல் நிலையத்திற்கு வருகை தரும் பொதுமக்கள், மனுதாரர்கள் தங்கள் பணிகளை எளிதில் மேற்கொள்ளவும், பொதுமக்களின் வசதிக்காகவும், எழுதப்படிக்க தெரியாத பொதுமக்களுக்கு மனுக்களை எழுதித்தரவும் பணியமர்த்தப்பட்டுள்ள வரவேற்பாளரிடம், பொதுமக்கள் அதிகம் கேட்கும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன், வரவேற்பாளர் பதிவேட்டையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, காவல் நிலையத்தில் பெறப்படும் புகார்கள், அதற்காக வழங்கப்படும் முதல்நிலை பதிவுகள் (CSR), இதுவரை பெறப்பட்ட புகார்கள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விவரம் குறித்து கேட்டறிந்து பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் நிலைய எழுத்தர் அறை பதிவேடுகள், சட்டம் ஒழுங்கினை பராமரித்திட மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், இதர பணிப் பதிவேடுகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதுநகர் காவல் நிலையத்தில் ஆண் கைதிகள் சிறை, பெண் கைதிகள் சிறை ஆகியவற்றை பார்வையிட்டு, காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் விவரம் குறித்து கேட்டறிந்ததுடன் கேமராக்கள் செயல்படுகின்றனவா என்று கண்காணிப்பு அறைக்கு சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பெண்காவலர்களிடம் வாரந்திர விடுப்பு வழங்கப்படுகின்றதா என்றும், சிறப்பு விடுப்புகள் தேவைப்பட்டால் வழங்கப்படுகின்றதா என்றும் கேட்டறிந்ததுடன் பதிவேடுகளை கொண்டு வரச் செய்து அவற்றை சரிபார்த்தார்.
பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்து பொதுமக்களின் நண்பர்களாக செயல்பட வேண்டும் என்று காவலர்களுக்கு துணை முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.