கால்நடைகளைக் காப்பது மனிதர்களின் கடமை!

3 months ago 21

நமது நாடு வேளாண்மையை ஒரு முக்கிய வளமாகக் கொண்ட நாடு. இதனால்தான் வேளாண்மையை நாட்டின் முதுகெலும்பு என மகாத்மா காந்தி குறிப்பிட்டார். இத்தகைய வேளாண்மை என்பது கால்நடைகளையும் உள்ளடக்கி இருக்கிறது. ஆடு, மாடு, கோழி என பலவும் விவசாயத் தொழிலுக்கு உதவுவதோடு விவசாயிகள் மற்றும் விவசாயத்தை நம்பியுள்ள தொழிலாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் துணைபுரிகின்றன. இந்த விலங்குகள் மட்டுமில்லாமல் பூனை, நாய் ஆகிய விலங்கினங்களும் நம்மைச் சார்ந்து வாழ்கின்றன. இவற்றை வளர்ப்பதால் நமக்கு பெருமளவில் லாபம் உண்டு. ஒன்று, நமது வீடுகளில் காய்கறிக்கழிவுகள், நாம் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் சேரக்கூடிய பிற உணவு சார்ந்த கழிவுகளையும் தங்களது உணவாக எடுத்துக்கொண்டு நமது சுற்றுப்புற சூழல் சுத்தமாக இருப்பதற்கு பெரிதும் துணை புரிகின்றன. பூனை மற்றும் நாய் போன்ற உயிரினங்கள் சிறிய மற்றும் பெரிய விஷ ஜந்துக்களிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. நம்மைச் சார்ந்துள்ள விலங்கினங்களில் விவசாயப் பெருமக்களுக்கு பெரிய அளவில் உதவுவது மாடுகள்தான். இயந்திர மயமாகிவிட்ட இன்றைய சூழ்நிலையிலும் கிராமங்களில் விவசாயப் பெருமக்கள் தங்கள் நிலங்களை உழுவதற்கும், விவசாய இடுபொருட்கள் மற்றும் விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கும் மாடுகளைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் அவற்றை வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் சாணம் மற்றும் கோமியம் நன்கு மக்கிய பின் வயல்களுக்கு சத்துமிக்க எருவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய மாடுகளின் நிலைமை அதுவும் நகர்ப்புறம் சார்ந்த பகுதிகளில் வளர்க்கப்படும் மாடுகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நகர்ப்புறம் சார்ந்த பகுதிகளில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு மேய்ச்சல் செய்யப்படும் பெரும்பாலான நிலப்பகுதிகள் குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்டதால் அவற்றுக்குத் தேவையான தீவனம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவை தங்களுக்குத் தேவையான தீவனத்தைத் தேடி நீண்ட தொலைவு செல்லத் தெரியாததாலும், நம்மைச் சுற்றியே வாழ்ந்து பழகியதாலும், நம்மால் விளம்பரங்களுக்காக சுவரில் ஒட்டப்படும் சுவரொட்டிகளையும், நாம் பயன்படுத்திய பின் தூக்கிப்போட்ட பிளாஸ்டிக் குப்பைகளிலும் மேய்ந்து பரிதாபமாக திரிகின்றன. அவ்வாறு மேய்ந்த மாடுகளின் ஆரோக்கியம் என்னவாகும்? அத்தகைய மாடுகளில் இருந்து பெறப்படும் பாலை மழலைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி அருந்துகிறார்கள். அவர்களுக்கு ஆரோக்கியம் குறைவான பாலின் மூலம் என்னென்ன விளைவுகள் ஏற்படும்? என்ற அக்கறை சிறிதளவு கூட இல்லாமல் நம்மில் பலர் இருக்கிறோம். மேலும் மழை பெய்யாத சூழ்நிலையில் அவை குடிப்பதற்கு நீரும் கிடைப்பதில்லை. அவ்வாறான சூழ்நிலையில் அவைகளின் கண்களில் நீர் வழிய தெருக்களில் நடந்து செல்லும் பரிதாபமான காட்சியைக் காண முடியும். ஐந்து முதல் 10 வருடத்திற்கு முன்னர் தனது தாய்ப்பசுவுடன் மேயச்சென்ற கன்றுக்குட்டி, இன்றும் அதே இடங்களை தேடிச்சென்று மேயும் நிலையில், இன்று அந்த நிலம் கட்டிடங்களாக மாறிவிட்டமையால் தீவனம் கிடைக்காமல் பரிதவிக்கிறது.

மனிதர்களாகிய நாம் நமது தேவைகளுக்காகவும் வசதியாக வாழவும் பல்வேறு அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்கிறோம். அதுபோல நம்மைச் சார்ந்து வாழும், நமக்கு பல வகைகளில் உபயோகமாக இருக்கும் மாடுகளுக்கு ஓரளவு தீவனம் கிடைக்கும் சூழலை அமைத்துக் கொடுப்பது நமது பிரதான கடமையாகும்.நமது தமிழக அரசு ‘‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று வருந்தி உரைத்த வள்ளலாரின் 200வது பிறந்த வருடத்தை விமர்சையாக கொண்டாடும் இந்தத் தருணத்தில், மோட்சத்திற்கு திறவுகோல் ஜீவகாருண்யமே! என்ற அவரின் இன்னுமொரு உண்மை தத்துவத்திற்கு உயிர் கொடுப்பது போல் இதுபோன்ற ஜீவன்கள் மகிழ்ச்சியாக வாழ வழி செய்வோம். நகர்ப்புறங்களில் குளங்கள் மற்றும் குட்டைகளுக்கு அருகேயுள்ள புறம்போக்கு நிலங்களில் மழைக்காலங்களை ஒட்டி மாடுகள் மேயத்தக்க தீவனப்புற்கள் மற்றும் மரங்களை உருவாக்கி, அந்த நிலங்களில் மேய அனுமதிக்கலாம். இதன்மூலம் நல்ல தீவனம் அளிப்பதோடு, சுவரொட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை இரையாக எடுப்பதை தவிர்க்கச் செய்யலாம். இதன்மூலம் நாம் சுகாதாரமான பாலைப் பெற்று பயன் அடையலாம். இதுபோன்ற செயல்பாடுகள் மாடுகளின் ஆரோக்கியத்தையும் நமது ஆரோக்கியத்தையும் நிச்சயம் பாதுகாக்கும். நமது விவசாயப் பெருமக்களின் பல்வேறு சாகுபடிக்கு சத்து மிகுந்த சாண எருவும் கிடைக்கும்.
– ம.மகேஸ்வரன்
வேளாண்மை அலுவலர்,
திருநெல்வேலி.

 

The post கால்நடைகளைக் காப்பது மனிதர்களின் கடமை! appeared first on Dinakaran.

Read Entire Article