நோயும் – தீர்வும்
பருவ மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் காரணமாக கால்நடைகளுக்கு பலவகையான நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக உண்ணிக்கடியின் மூலம் கால்நடைகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றன. இந்த உண்ணிகள் கால்நடைகளை நேரடியாக மற்றும் மறைமுகமான நோய்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சில வகை உண்ணிகள் தங்கள் வாழ்க்கைச் சுழற்சிக்கு ஒரே ஒரு கால்நடையை நம்பியிருக்கும். ஆனால், வேறு சிலவகை உண்ணிகளின் வாழ்க்கைச் சுழற்சிமுடிவுற ஒன்றிற்கும் மேற்பட்ட கால்நடைகள் தேவைப்படுகின்றன. இத்தகைய உண்ணிகளால் கால்நடைகளுக்கு எந்த மாதிரியான நோய்கள் உண்டாகும், அவைகளை எப்படி சரி செய்வது எனப் பார்க்கலாம்.
இரத்த இழப்பு
உண்ணிகள் இரத்தத்தை உறிஞ்சி வாழும் உயிரி என்பதால் அதன் வாழ்நாளைப் பூர்த்தி செய்யச் சுமார் 30 சொட்டு இரத்தம் தேவைப்படுகின்றது. நூற்றுக்கணக்கான உண்ணிகள் கால்நடைகளைக் கடித்து இரத்தம் குடிப்பதனால் இரத்தச் சோகை ஏற்படுகிறது. இதனால் கால்நடைகள் எடை குறைந்தும், வளர்ச்சி குன்றியும் காணப்படுகிறது.
உறுத்தல் உண்ணிகள்
கால்நடை களைக் கடிப்ப தனால் கால்நடைகளுக்குப் பெரும் உறுத்துதல் ஏற்படுகிறது. இதனால் அவை தீவனம் உட்கொள்வதில் கவனம் செலுத்தாது. இதனால் பால் உற்பத்தி, உடல் எடை குறைந்துவிடுகிறது.
பக்கவாதம்
உண்ணிகளின் உமிழ்நீரில் உள்ள நச்சுப் பொருள்கள் கால்நடைகளைக் கடிக்கும்போது கால்நடைகளின் உற்பத்தித் திறன் பாதிப்படைகிறது. கடின உண்ணிகள் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருவிதப் பக்கவாதத்தை உண்டாக்குகின்றன. இதனால் நரம்பு மண்டலப் பாதிப்பு ஏற்படுகிறது. சுவாச மண்டலத்திலுள்ள தசைகள் செயலிழந்து போவதனால் இறப்பும் ஏற்படுகிறது. பக்கவாதத்தின் தீவிரம் உண்ணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும் அவை இரத்தம் உறிஞ்சும் நேரத்தைப் பொறுத்தும் இருக்கும்.
வால்பகுதி இழப்பு
உண்ணிகள் கொத்துக் கொத்தாக வாலின் நுனிப்பகுதியில் காணப்படும்போது, அவை வாலின் நுனிப்பகுதியை முற்றிலும் கடித்துச் சேதப்படுத்துகின்றன. இதனால் அந்தப் பகுதி இல்லாமல் போய்விடுகின்றது. இதனால் கால்நடைகள் தங்களின் வாலின் நுனிப்பகுதியால் ஈக்களை விரட்டுவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது.
தோல் பாதிப்பு
உண்ணிகளின் வாய்ப்பகுதி தோலைத் துளைத்துக்கொண்டு செல்வதால் தோலில் அடையாளங்கள் உண்டாகிவிடுகின்றன. இந்த அடையாளங்கள் தோலின் மதிப்பை வெகுவாகக் குறைத்துவிடுகின்றன.
உண்ணிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்
உண்ணிகள் மேற்கூறிய நேரடிப் பாதிப்புகளை கால்நடைகளுக்கு ஏற்படுத்துகின்றன. அதனை கட்டுப்படுத்த உண்ணிகளின் வாழ்விடங்களை அறிந்து அதற்கேற்ப கட்டுப்படுத்த வேண்டும். கோழிகளின் தங்குமிடங்களில் காணப் படும் உடைப்புகள், வெடிப்புகளை வெப்பநிலையில் உள்ள தார்மூலம் அடைத்தல் வேண்டும். மருந்துக் கலவைப் புகை மூட்டம் மூலமும், தீ உமிழ் துப்பாக்கி மூலமும் இந்த உண்ணிகளை அழிக்கலாம். அதேபோல், உண்ணி நீக்க மருந்துகளைக் கால்நடைகளின்உடலில் தெளிப்பான் மூலமாகவோஅல்லது மருந்து கலந்த நீரைத் தொட்டியில் நிரப்பி அதில் கால்நடைகளை அமிழ்த்தி எடுத்தும் உண்ணிகளை நீக்கலாம்.உண்ணிகளைக் கட்டுப்படுத்த வேதிப் பொருள்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகளைக் கால்நடை மருத்துவரின் அறிவுரைப்படி குறிப்பிட்ட அளவு மருந்தை நீரில் கலந்து தெளித்தோ அல்லது மருத்துவக்குளியல் மூலமாகவோ பயன்படுத்தலாம். முதலில் கால்நடைகளை நீரில் நனைத்துவிட்டுப் பின்னர் உண்ணி நீக்க மருந்தைத் தெளித்துக் குறிப்பிட்ட நேரம் கழித்துக் குளிப்பாட்டுதல் அவசியம்.உண்ணி நீக்க மருந்துகளை அளிக்கும் போது ஒரே மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்தாமல் பலவித உண்ணிநீக்க மருந்துகளைச் சுழற்சி முறையில் பயன்படுத்துதல் வேண்டும். இதனால் உண்ணிகள் மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்புச்சக்தியை வளர்த்துக்கொள்வதனைத் தடுக்கலாம். உண்ணிகளால் பாதிப்புக்குள்ளான மேய்ச்சல் நிலங்களை உழுதுவிடவோ அல்லது எரித்துவிடவோ செய்தல் வேண்டும். இப்போது உண்ணி நீக்க மருந்துகள் தடவப்பட்ட காது வளையங்கள், காதுப்பட்டைகள், கழுத்துப்பட்டைகள் கிடைக்கின்றன.
இவற்றைக் கொண்டு உண்ணிகளைக் கட்டுப்படுத்தலாம். இம்முறையில்மருந்துகள் சிறிது சிறிதாக உடலில் உட்கொள்ளப்படுவதனால் இவற்றின் உண்ணிகளைக் கொல்லும் திறன் அதிக நாள்கள் காணப்படும்.தற்பொழுது உண்ணிகளைக் கட்டுப்படுத்தும் முறைகளில் உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உண்ணிகள் கட்டுப்படுத்தப்படும் வேதிப்பொருள்களால் சுற்றுப்புறச் சூழ்நிலை மாசுபடுவதனாலும் உண்ணிகள் இந்த வேதிப்பொருள்களுக்கெதிராக எதிர்ப்புத் தன்மையை ஏற்படுத்திக் கொள்வதாலும் தற்போது வேதிப்பொருள்கள் அல்லாத மற்ற முறைகளில் ஆராய்ச்சியாளர்களின் கவனம் திரும்பி யுள்ளது. இவற்றில் உயிரியல் முறைகள், மூலிகைச் செடிகள், சவுண்டல், முயல் மசால் போன்றவற்றை வளர்த்து உண்ணிகளைக் கட்டுப்படுத்துதலாம். மேலும், உண்ணிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பயன்படுத்தியும் உண்ணி வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். அதேபோல், உண்ணிகள் வராமல் கால்நடைகள் மற்றும் பண்ணையைச் சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியம். உடலைத் தினமும் தேய்த்துவிடுதல் மற்றும் உரோமப்பகுதிகளைத் தினமும் சுத்தம் செய்தல் மூலம் உண்ணிகளைக் கண்டுபிடித்து அழித்து அவற்றைக் கட்டுப்படுத்தலாம். மேற்கூறிய வழிகளில் உண்ணிகளைக் கட்டுப்படுத்தியும் அவற்றினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தியும் பண்ணையாளர்கள் தங்களின் இலாபத்தை அதிகரிக்கலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
The post கால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள் appeared first on Dinakaran.