நிச்சயித்த பெண்ணுடன் இரவில் ‘ரிசப்ஷன்’ காலையில் வேறு பெண்ணுடன் ‘மேரேஜ்’: ரூ.1 கோடி வரதட்சணையுடன் மணமகன் எஸ்கேப்

3 hours ago 2

திருமலை: ரூ.1 கோடி வரதட்சணை கொடுத்த நிலையில் நிச்சயித்த பெண்ணுடன் இரவில் திருமண வரவேற்பை முடித்துவிட்டு அதிகாலையில் தனது காதலியுடன் மணமகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஹுசூராபாத் ரங்காபூர் பகுதியை சேர்ந்தவர் மதுகர்ரெட்டி(27), சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கும், ஹுசுராபாத் அடுத்த காட்ரப்பள்ளியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெரியோர்கள், உறவினர்கள் முன்னிலையில் சில மாதங்களுக்கு முன் ஆடம்பரமாக நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. இவர்களின் திருமணம் நேற்று நடக்கவிருந்தது.

திருமணத்தையொட்டி நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் என பலர் பங்கேற்றனர். இதில் மணமகன், மணமகள் இருவரும் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். இந்நிலையில் நேற்று காலை திருமண மேடையில் நலங்கு வைக்க மணமகள் காத்திருந்தார். ஆனால் மணமகன் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அனைவரும் மணமகன் அறைக்கு சென்று பார்த்தபோது அவரை காணவில்லை. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் மதுகர் ரெட்டியின் பெற்றோரின் செல்போனுக்கு புகைப்படம் வந்தது. அந்த புகைப்படத்தில், மதுகர்ரெட்டி ஒரு கோயிலில் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டிருப்பதும், அது தனது காதலி எனவும், அவரை திருமணம் செய்துகொண்டதாக வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளார். இதனால் மணமகள் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மணமகன், இரவோடு இரவாக அறையைவிட்டு வெளியேறி வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

இந்நிலையில் திருமண நிச்சயதார்த்தத்தின்போது, ரூ.40 லட்சம் மதிப்புள்ள அரை ஏக்கர் நிலம், 15 சவரன் நகை மற்றும் வரதட்சணையாக ரூ.6 லட்சம் என சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான வரதட்சணை பெற்றுக்கொண்டு வேறுபெண்ணை திருமணம் செய்துகொண்டதாகவும், எனவே தாங்கள் கொடுத்த வரதட்சணையை திருப்பித்தரும்படியும் கூறி மாப்பிள்ளை வீட்டாரிடம் மணமகள் குடும்பத்தினர் கேட்டனர்.

ஆனால் ஆனால் மதுகர் ரெட்டியின் தந்தை ஸ்ரீனிவாஸ், பணத்தை திரும்ப தர முடியாது, என்ன செய்யவேண்டுமோ செய்துகொள்ளுங்கள் எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் மணமகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மதுகர் ரெட்டியை தேடி வருகின்றனர்.

The post நிச்சயித்த பெண்ணுடன் இரவில் ‘ரிசப்ஷன்’ காலையில் வேறு பெண்ணுடன் ‘மேரேஜ்’: ரூ.1 கோடி வரதட்சணையுடன் மணமகன் எஸ்கேப் appeared first on Dinakaran.

Read Entire Article