சென்னை: அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கிய நிலையில், காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் அந்த வெயிலை குளிர்விக்கும் வகையில் சென்னை மற்றும் வட, தென் மாவட்டங்களில் மழை பெய்தது. கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் முற்றிலும் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு கிழக்கு மேற்கு காற்று இணைவு ஏற்பட்டு தமிழகத்துக்குள் புகுந்து ஆந்திர எல்லையோர மாவட்டம் வரை மழை பெய்யத் தொடங்கியது.
நேற்று முன்தினம் கிழக்கு காற்று தமிழக கடலோரப் பகுதியில் நுழைவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், வடக்கு நோக்கி பயணித்தது. இதன் காரணமாக 3ம் தேதி பெய்ய வேண்டிய மழை சற்று தாமதமாக நேற்று பெய்தது. மேலும், தமிழக கடலோரமாக பயணித்துக் கொண்டு இருக்கும் காற்றும், அரபிக் கடல் பகுதியில் இருந்து குமரிக் கடல் பகுதியை சுற்றிக் கொண்டு வரும் காற்றும் இணைந்து வடக்கு நோக்கி பயணிக்கும் நிலை உள்ளது. அதே நேரத்தில் குளிர்விக்கும் காற்று இல்லை என்பதால் மழை சற்று குறைவாக பெய்ய வாய்ப்புள்ளது.
அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கிய நேற்று காலையில் இருந்து தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக, வேலூரில் 105.6 டிகிரி வெயில் நேற்று சுட்டெரித்தது. திருத்தணி, திருச்சி, மதுரை விமான நிலையம், கரூர்பரமத்தி ஆகிய இடங்களில் 104 டிகிரி, சென்னை சேலம் 103 டிகிரி, பாளையங்கோட்டை, புதுச்சேரி, தர்மபுரி 100 டிகிரி வெயில் நிலவியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 90 முதல் 100 டிகிரி என இருந்தது.
ஆனால், மேற்கு திசையில் இருந்து கிழக்கு நோக்கி நேற்று வெப்ப காற்று புகுந்த நிலையில் ஓரிரு இடங்களில் அதிகபட்சம் 105 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பாக அமைந்துவிட்டது. கடந்தஆண்டில் 111 டிகிரி வரை அதிகரித்த அக்னி நட்சத்திர வெயில், இந்த ஆண்டு இயல்பான வெப்பநிலையாக தான் இருக்கும். இது சில நாட்கள் மட்டும் அதிகரிக்க வாய்ப்பு இருந்தாலும் பெரும்பாலான நாட்களில் 100 டிகிரியை ஒட்டியே இருக்கும்.
அதாவது இந்த அக்னி நட்சத்திர காலத்தில் ஓரிரு இடங்களில் வெயில் அதிகரிக்க வாய்ப்பு இருந்தாலும், 104 டிகிரியை தாண்ட வாய்ப்பு இல்லை. குறிப்பாக சராசரியாக 100 டிகிரியாக இருக்கும் வ கையில் கோடை மழை பெய்ய இருக்கிறது. தமிழக உள் மாவட்டங்கள், வங்கக் கடலோரப்பகுதிகள், ஆந்திரா, கிருஷ்ணகிரி, தர்மபுரி கள்ளக்குறிச்சி, விழுப்புரம் பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இந்நிலையில், இரண்டாவது வாரத்தின் பிற்பகுதியில் நல்ல மழை பெய்யும். வங்கக் கடலோரத்தில் மழை வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வட கடலோரப் பகுதியிலும் மழை பெய்யும். மதுரைக்கு தெற்கு மாவட்டங்களில் சராசரியை விட அதிக அளவில் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மழை: காற்று குவிதல் காரணமாக சென்னையில் கனமழை உருவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு பிறகு மழை பெய்தது. மேலும், ஆந்திராவில் திருப்பதியிலும் மழை பெய்தது. வங்கக் கடலோரப் பகுதியில் நுழைந்து காற்று குவிவு பழவேற்காடு, ஊத்துக்கோட்டை, திருத்தணி வழியாக தமிழகத்துக்குள் நேற்று மதியம் நுழையத் தொடங்கியது. அதன் காரணமாக சென்னையில் கனமழை பெய்யும் சூழ்நிலை உருவானது.
அதன் தொடர்ச்சியாக வட மேற்கு பகுதியில் இருந்து சூறைக்காற்றுடன் கடல் பகுதியை நோக்கி காற்று வீசத் தொடங்கியது. அதன் காரணமாக தூறல், இடி மின்னல் பின்னர் மழை என படிப்படியாக பெய்யத் தொடங்கியது. சென்னையில் நேற்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வு 5.30 மணிக்கு வலுப்பெற்றது. பின்னர் 6.30 மணி வரை திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, செங்கல்பட்டு, மாமல்லபுரம் வரை மழை பெய்தது.
ஏற்கெனவே கணிக்கப்பட்டபடி மே முதல் வாரத்துக்கான மழை நேற்று தொடங்கியுள்ளது. இந்த மழை இன்றும் நீடிக்கும். இது தவிர ஆந்திரா, கர்நாடகா, திருப்பத்தூர், வேலூர், பகுதிகளிலும், உள் பகுதியில் கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, சேலம், மேட்டூரை ஒட்டிய பகுதிகள், எண்ணமங்கலம், கோபி, சத்தியமங்கலம், தூக்கநாயக்கன் பாளையம், ஆகிய இடங்களில் நேற்று மாலையில் மழை பெய்து பின்னர் மேற்கு நோக்கி நகர்ந்து சென்றது.
அதாவது குன்னூர், உதகமண்டலம், கேரள எல்லையோரம் நகர்ந்து சென்றது. அதேபோல தென் மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் முழுவதும் மழை பெய்தது. விருதுநகர், முல்லைப் பெரியாறு, வால்பாறை, கொடைக்கானல் பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்றைய மழையை பொருத்தவரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் தான் அதிக அளவில் மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது.
* சூறாவளிக் காற்றுடன் கனமழை
குன்றத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால், சாலை எங்கும் புழுதி பறந்தது. அத்துடன் கடைகளில் இருந்த விளம்பர போர்டுகள், பதாகைகள் காற்றின் வேகத்தில் ஈடு கொடுக்க முடியாமல் வேகமாக அடித்துச் சென்றது. சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த திடீர் மழை காரணமாக சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றதை காண முடிந்தது. மழை காரணமாக திரண்ட கரும் மேகங்களால் அந்தப் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து இரவு போன்று காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். காற்றின் வேகத்தாலும் மழையின் தாக்கத்தாலும் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பெய்த கனமழையால் அந்தப் பகுதியெங்கும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
* சூறாவளி காற்றில் தியேட்டரின் மேற்கூரை இடிந்து விழுந்தது: ரசிகர்கள் அலறியடித்து ஓட்டம், காட்சிகள் ரத்து: பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஈவிபி பிலிம் சிட்டி உள்ளது. இந்த வளாகத்தில் சந்தோஷ் சினிமாஸ் என்ற பெயரில் திரையரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை திடீரென பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியதைத் தொடர்ந்து திடீரென கனமழை பெய்தது. பலத்த காற்றின் வேகத்தால் அந்த தியேட்டரின் முகப்பு மற்றும் மேற்கூரை பகுதிகள் நொறுங்கி விழுந்தன.
இதையடுத்து தியேட்டருக்குள் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அலறியடித்தபடி தியேட்டரை விட்டு வெளியே ஓடிவந்தனர். அப்போது தியேட்டரின் மேற்பகுதி மளமளவென சீட்டுக்கட்டு போல் காற்றில் பறந்து சரிய தொடங்கியது. இந்த சத்தம் கேட்டதும் கொட்டும் மழையிலும் ரசிகர்கள் வாகனங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றனர். இதையடுத்து தியேட்டர் நிர்வாகம் உடனடியாக தியேட்டரில் படம் திரையிடப்படுவதை நிறுத்தியதுடன் காட்சியை ரத்து செய்து அவசர அவசரமாக ரசிகர்களை வெளியேற்றினர். இது குறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தியேட்டர் நிர்வாகம் சார்பில் உடனடியாக கிரேன் உதவியுடன் தியேட்டரின் மேற்கூரைகள் சரிந்த பகுதிகளை அப்புறப்படுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தியேட்டரில் சேதம் அடைந்த பகுதிகள் சீரமைக்கும் வரை காட்சிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக ரசிகர்கள் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
* கூடுவாஞ்சேரியில் ஆலங்கட்டி மழை
கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், தைலாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை திடீரென புழுதியுடன் சூறாவளி காற்று வீசியது. பின்னர் அரை மணி நேரம் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தன. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சூறாவளி காற்று வீசியதால் உடனே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன. இதில் அரை மணி நேரம் பெய்த மழைக்காக 2 மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் விநியோகம் செய்யாததால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர் நோய்வாய்ப்பட்டோர் என அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிப்பட்டனர்.
The post காலையில் வெயில் மாலையில் மழை: ஐஸ் ஆனது அக்னி நட்சத்திரம் appeared first on Dinakaran.