சென்னை: காலையில் ரூ.1000, மாலையில் ரூ.600 என பவுன் ரூ.72,800 என தங்கம் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக அதிகரித்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டு ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி ரூ.74,320 என ஒரு பவுன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை எட்டியது.
அட்சய திரிதியை வரை உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களுக்கு முன்பு இறங்கு முகமாகவே இருந்தது. எனினும் நேற்று முன்தினம் முதல் மீண்டும் தங்கத்தின் விலை உயர தொடங்கி உள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, தங்கத்தின் விலை நேற்று காலை பவுனுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,200க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் ரூ.1000 உயர்ந்ததால் நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி அடங்குவதற்குள், நேற்று மாலையும் தங்கம் விலை உயர்ந்து அதிரடி காட்டியது.
அதாவது, தங்கம் விலை ஒரே நாளில் நேற்று 2வது முறையாக உயர்ந்தது. தங்கத்தின் விலை மாலையில் கிராம் ஒன்றுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.9,100க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9,025 ஆக இருந்த நிலையில், நேற்று 2வது முறையாக விலை அதிகரித்து ரூ.9,100 ஆக உயர்வடைந்தது. இதேபோன்று, பவுன் ஒன்று ரூ.72,200 ஆக இருந்த நிலையில், மீண்டும் நேற்று மாலை விலை உயர்ந்ததில் ரூ.72,800 ஆக அதிகரித்தது.
அதன் விலை மாலையில் பவுனுக்கு ரூ.600 வரை உயர்ந்துள்ளது. அதாவது ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1600 வரை உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வு, இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் உள்ளிட்ட சில காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தங்க மதிப்பீட்டாளர்கள் கூறியுள்ளனர்.
The post காலையில் ரூ.1000; மாலையில் ரூ.600 உயர்வு ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை உயர்வு: ரூ.72,800க்கு பவுன் விற்பனை appeared first on Dinakaran.