காலை தொட்டு வணங்குவது போல் நடித்து... ரியல் எஸ்டேட் தரகர், மருமகன் சுட்டு கொலை

2 months ago 12

புதுடெல்லி,

டெல்லியின் கிழக்கே ஷாதரா நகரில் பார்ஷ் பஜார் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் சர்மா (வயது 40). ரியல் எஸ்டேட் தரகரான இவர், பணம் கொடுக்கல், வாங்கலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு இரவில் குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து கொண்டாடி கொண்டிருந்தபோது, அவர் சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த துப்பாக்கி சூட்டில் அவருடைய மகன் கிரிஷ் (வயது 13) காயமடைந்துள்ளான். துப்பாக்கி சூட்டை நடத்தியவர்களை பிடிக்க சென்ற ஆகாஷின் மருமகனான ரிஷப் (வயது 16) சுட்டு கொல்லப்பட்டான். இந்த தாக்குதலை நடத்திய நபர் தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த விசாரணையில், துப்பாக்கி சூட்டை திட்டமிட்டு, பின்புலத்தில் இருந்து செயல்பட்டு நடத்திய 17 வயது சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளான். இதுபற்றிய சி.சி.டி.வி. பதிவுகள் அடங்கிய வீடியோ ஒன்றும் வெளிவந்துள்ளது.

அதில், ஸ்கூட்டி ஒன்றில் வந்த அந்த சிறுவன், பட்டாசு வெடித்து கொண்டிருந்த ஆகாஷை நெருங்கி அவருடைய காலை தொட்டு வணங்குவது போன்று நடித்துள்ளான். இதனால் யாரை சுட வேண்டும் என உடன் வந்த நபருக்கு அடையாளம் காட்டியிருக்கிறான்.

சிறுவனை பார்த்ததும், ஆகாஷ் வீட்டுக்குள் தப்பியோட முயன்றபோது, உடன் நின்ற நபர் பின்னால் ஓடிச்சென்று துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஆகாஷ் பலியானார். அவருடைய மகனுக்கு படுகாயம் ஏற்பட்டு உள்ளது. இதனை பார்த்து கொண்டிருந்த மருமகனான ரிஷப் அதிர்ச்சி அடைந்துள்ளான். அவர்களை பிடிக்க ஓடியபோது, துப்பாக்கி சூட்டில் பலியானான்.

ஆகாஷக்கு எதிராக குற்ற வரலாறு காணப்படுகிறது. 20 ஆண்டு காலத்தில், துன்புறுத்துதல், சூதாட்டம், மோசடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதுதவிர, கடத்தல் மற்றும் கும்பல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன என போலீசார் தெரிவித்தனர். விவேக் விஹார் பகுதியில் அவருக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கு உள்ளது. கொலை முயற்சி வழக்கு ஒன்றும் கடந்த ஆண்டு ஆகாசுக்கு எதிராக பதிவானது.

ஆகாஷ், கடந்த மாதம் ரூ.70 ஆயிரம் பணம் கொடுத்து வீடு ஒன்றின் மீது துப்பாக்கி சூடு நடத்தும்படி சிறுவனிடம் கூறியுள்ளார். ஆனால், கூறியபடி பணம் கொடுக்காமல் இழுத்தடித்ததில் சிறுவன் ஆத்திரமடைந்து உள்ளான். இதற்கு பழிவாங்க ஆகாஷை ஆள் வைத்து சுட்டு கொன்றுள்ளான் என போலீசார் தெரிவித்தனர். அந்த சிறுவன் ஆகாஷின் உறவினர் என்றும் கூறப்படுகிறது. ஆகாஷின் உறவினர் ரிஷப் மீதும் 14 வழக்குகள் உள்ளன.

Read Entire Article