காலில் விழாதீங்கனு தவழ்ந்து போனவர் சொல்றாரே என்று தொண்டர்கள் கிண்டலடித்ததை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

4 months ago 11

‘‘ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆளுமைகளின் ஒத்துழைப்பால் தனியார் சுற்றுலா மையங்கள் ஜொலித்ததாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘சுற்றுலாவுக்கு பெயர்போன புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. விடுதிகள் எல்லாம் நிரம்பியதோடு சுற்றுலா மையங்களிலும் கூட்டம் மொய்த்ததாம்.. இதற்கு பலவித ஆடல்பாடல் கலைநிகழ்ச்சிகளை தனியார் அமைப்புகள் சிறப்பாக செய்திருந்ததுதான் காரணமாம்..

ஆனால் மாஜி ஒன்றிய ஆளுமையின் மறைவால் மாநில அரசாங்கம் செய்திருந்த எல்லா புத்தாண்டு சிறப்பு நிகழ்வுகளும் ஒருவாரத்துக்கு ரத்தான நிலையில் இதை தங்களுக்கு சாதமாக்கி ப விட்டமினை அள்ளி விட்டார்களாம் தனியார் பிரபலங்கள். இதற்கு அதிகாரத்தில் இருக்கும் மக்களோட பிரதிநிதிகள் சிலரும் மறைமுக ஆதரவாம்.. சமீபத்தில் மக்களோட பிரதிநிதிகள் கிராமப்புற சுற்றுலா மையத்துக்கு சென்றபோது அங்கிருந்த படகுகள் உடைஞ்சுபோய் பஞ்சராகி கிடப்பதை பார்த்து விரக்தியுடன் நின்றார்களாம்..

அங்கு வழிகாட்டுவதுபோல் நின்றிருந்த சிலர், அருகிலுள்ள தனியார் பொழுதுபோக்கு மையத்தை கைகாட்டி அனுப்பினார்களாம்.. இதை பார்த்த உள்ளூர்வாசிகளோ, ஆளுமைகளின் ரகசிய ஒத்துழைப்பால் தனியார் ஜொலிக்கிறதுபோல என்றபடி முணுமுணுப்போடு நகர்ந்தார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சியில் இருந்து வரும் பனிப்போருக்கு மாஜியானவர் மூலம் விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையால் நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மலைக்கோட்டை மாநகரில் இலை கட்சியில் இரு தரப்புக்கு இடையே நீடித்து வரும் பனிப்போர் தலைமை வரை சென்றுள்ளது. இந்த பனிப்போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வேலையில் தலைமை தீவிரமாக இறங்கியுள்ளதாம்.. இதற்கான வேலைகளும் திரைமறைவில் நடந்துக்கிட்டு இருக்காம்… சில தினங்களுக்கு முன்பு மலைக்கோட்டை மாநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தூங்கா நகரை சேர்ந்த மாஜி அமைச்சர் திடீரென கலந்து கொண்டதால் கட்சிக்குள்ளே பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மலைக்கோட்டையில் முக்கிய நபர்கள் யாரும் இல்லையா என நிர்வாகிகள் கேள்வி எழுப்பியிருக்காங்க.. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாஜி அமைச்சர் கலந்துகொண்டது மூலம் இருதரப்பினர் நிர்வாகிகளுக்கு இடையே இருந்து வரும் பனிப்போருக்கு மாஜியானவர் மூலம் மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சீனியர் நிர்வாகிகளுக்குள் டாப்பிக் ஓடுகிறதாம்.. இந்த தகவல் தெரிய வந்த இருதரப்பு நிர்வாகிகள் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சேலத்துக்காரருக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல திரண்ட கூட்டத்திற்கு இடையே யாரும் காலில் விழாதீங்க… விழாதீங்கன்னு ஒரே சவுண்ட்டாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியின் ஜெனரல் செகரட்டரியான சேலத்துக்காரரு, பண்டிகை நாட்களில் சொந்த ஊரில் முகாமிடுவதை ஒரு சென்டிமென்டாகவே வச்சிருக்காராம்.. இந்த வகையில் நியூ இயருக்கும் இங்கதான் இருப்பாரு என்பது கட்சிக்காரர்களின் கணக்காம்.. இதை எதிர்பார்த்து மாங்கனி மாநகரில் உள்ள வீட்டில் காலையிலேயே கட்சிக்காரங்க திரண்டாங்களாம்.. ஆனால் சேலத்துக்காரரு மதியத்துக்கு மேல் தான் ஊருக்கு வந்தாராம்..

இப்படி வந்தவரு, திரண்டிருந்த தொண்டர்களிடம் வாழ்த்துகளை வாங்கிக்கிட்டாராம்.. அப்போது பக்கத்தில் நின்ற அடிப்பொடி ஒருத்தரு, யாரும் கால்ல விழாதீங்க, யாரும் கால்ல விழாதீங்க என்று சவுண்டு குடுத்துக்கிட்டே இருந்தாராம்.. இப்படி அவரு பத்து தடவைக்கும் மேல் கூவினது, பக்கத்தில் இருந்த நிர்வாகிகளுக்கு கொஞ்சம் சங்கோஜமா இருந்ததாம்.. தொண்டர்களிடம் வாழ்த்து வாங்கிய தலைவரும் கால்ல விழாதீங்கப்பா, வீடியோ எடுக்கிறாங்கன்னாராம்.. நம்ம லீடரு வாழ்த்து வாங்கறத எல்லாம் வீடியோவில் பதிவாகிக்கிட்டு இருக்குப்பா..

அதனால, அவரு நம்மள உஷார் பண்ணிக்கிட்டு இருக்காரு என்று வாழ்த்து தெரிவித்துவிட்டு நகர்ந்தாங்களாம் மூத்த நிர்வாகிகள்.. அது சரி, நம்ம கட்சியில கால்ல விழாதீங்கன்னு சொல்றது கூட, புதுவருஷத்தில் புதிய விஷயம்தாங்க என்று சில மூத்த நிர்வாகிகள் கலகலப்பும் ஊட்டினாங்களாம். சிலரோ இன்னும் ஒரு படி மேலே போய், ‘தவழ்ந்து போனவரு எல்லாம் கால்ல விழாதீங்கன்னு சொல்றது காலக்கொடுமை’னு சொல்லிட்டு சிரிச்சாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘காவல்துறை சேதி ஏதும் உண்டா..’’ என கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கடந்த சனிக்கிழமை இரவு பெரிய அளவில் போலீஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு, பணி மாறுதல் பட்டியல் வெளியானது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கொடுக்க வேண்டிய பதவி உயர்வு, 6 மாதம், 8 மாதம் ஏன் 11 மாதம் கழித்துக் கூட வெளியாகும். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஜனவரி 1ம் தேதியே பட்டியல் வெளியாகி வருகிறது. இந்த ஆண்டு 2 நாளைக்கு முன்னாடியே வெளியாகியுள்ளதாம். இதனால் ஐபிஎஸ் அதிகாரிகள் அனைவரும் சந்தோசத்தில் உள்ளார்களாம். சமீபத்தில் வெளியான பணி மாறுதல் விவகாரத்தில் கூட குறைகள் சொல்ல முடியாத அளவுக்கு பணி மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

The post காலில் விழாதீங்கனு தவழ்ந்து போனவர் சொல்றாரே என்று தொண்டர்கள் கிண்டலடித்ததை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article