காலாண்டு விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க நெல்லை அறிவியல் மையத்தில் மாணவிகள் குவிந்தனர்

1 month ago 10

தியாகராஜநகர்: காலாண்டு விடுமுறை தொடங்கிய நிலையில் பள்ளி மாணவிகள் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க நெல்லை அறிவியல் மையத்தில் குவிந்தனர்.தமிழகத்தில் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வு நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று முதல் காலாண்டு விடுமுறை தொடங்கியது.

வருகிற அக்டோபர் 6ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் சில பள்ளிகளில் இருந்து மாணவிகள் விடுமுறையை பயனுள்ளதாக கழிப்பதற்காக கல்வி சுற்றுலா அழைத்து செல்கின்றனர்.

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்திற்கு கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று அதிக அளவில் கல்வி சுற்றுலாவாக வருகை தந்தனர்.

அவர்களுடன் ஆசிரியர்களும் வந்தனர். அவர்கள் அறிவியல் மையத்தின் வளாகம் முழுவதையும் சுற்றி பார்த்தனர். அறிவியல் கூடங்களில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் மாதிரிகளை பார்வையிட்டனர். அவர்களுக்கு அறிவியல் மைய செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மைய அலுவலர் குமார் கல்வி அலுவலர் மாரி லெனின் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர்.

இது குறித்து மாணவிகள், ஆசிரியர்கள் கூறியதாவது: ‘பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், விடுமுறை தினத்தை பயனுள்ளதாக கழிப்பதற்காகவும் அறிவியல் குறித்த புதிய விபரங்களை தெரிந்து கொள்வதற்காகவும் கல்வி சுற்றுலாவாக அறிவியல் மையத்திற்கு வருகை தந்தோம்.

இங்கு பல்வேறு புதிய அறிவியல் நிகழ்வு தொடர்பான விவரங்களை செய்முறை விளக்கங்களுடன் அறிந்து கொண்டோம்’ என்றனர். இதனிடையே அறிவியல் மையத்தில் நேற்று சர்வதேச அறிவியல் கலாச்சார மனப்பான்மை தினம் கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

The post காலாண்டு விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க நெல்லை அறிவியல் மையத்தில் மாணவிகள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article