காலாண்டு விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

2 months ago 20

*குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

ஜோலார்பேட்டை : காலாண்டு விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் திரண்டதால் களைகட்டியது.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த மலையானது 4 புறமும் மலைகளால் சூழப்பட்டு 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக விவசாயம், வனப்பொருட்கள் சேகரிப்பு, சுயதொழில், வியாபாரம் போன்றவற்றை செய்து வருகின்றனர்.

மேலும், ஏலகிரி மலையில் எந்த காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த சுற்றுலா தலத்தை ஆங்காங்கே மலை உச்சி பகுதியில் இருந்து பூமி பகுதியை காண்பதற்காக பார்வை மையம் அமைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் நின்று பார்வையிட்டும் செல்பி எடுத்தும் செல்கின்றனர்.

மேலும், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, படகு துறை உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களில் அமர்ந்து குடும்பத்துடன் கண்டு ரசித்து மகிழ்கின்றனர். இந்நிலையில், தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் ஏலகிரி மலை சுற்றுலா தலத்திற்கு வந்து பல்வேறு இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

மேலும், இங்குள்ள பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களில் குழந்தைகளை விளையாட செய்தும், படகு துறையில் படகில் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகை பழங்கள், சாக்லேட் வகைகள், கைவினை பொருட்கள் போன்றவற்றை வாங்கியும், ஏலகிரி சுற்றுலா தளத்திற்கு வந்ததிற்கு அடையாளமாக இங்கிருந்து பல்வேறு பொருட்களை ஞாபகார்த்தமாக வாங்கி சென்றனர். குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வழக்கமாக இருந்த கூட்டத்தை காட்டிலும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் திரண்டதால் களைகட்டியது.

The post காலாண்டு விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article