*யாத்திரீகர்கள் வலியுறுத்தல்
கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் ஏர்வாடியில் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராகிம் பாதுஷா நாயகம் தர்கா அமைந்துள்ளது. இங்கு சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீது(ஒலி) என்ற பாதுஷா நாயகம் உள்ளிட்ட பல ஒலியுல்லாக்களின் மஹான்களின் அடக்கஸ்தல்ங்கள் உள்ளது. இறைபணிக்காக பல நூறு ஆண்டுகளுக்கு முன் சவூதி அரேபியாவில் இருந்து இந்தியா வருகை தந்தர். ஏர்வாடி தர்ஹா பகுதியில் மக்களுக்கான நற்பணிகளை மேற்கொண்ட மன்னராக திகழ்ந்தார். இன்று வரை இப்பகுதி மக்கள் மட்டும் இன்றி உலகம் முழுவதும் உள்ள ஆன்மீகத்தில் உள்ளோர் பாதுஷா நாயகத்தின் மேல் உள்ள அன்பில் அவரின் அடக்கஸ்தலத்திற்கு வருகை தருகின்றனர்.
ஏர்வாடி தர்ஹாவில் பாதுஷா நாயகத்தின் சமாதி (மக்பரா)மட்டுமின்றி இறை நேசர்களான அவர்களது மைந்தர் செய்யது அபுதாஹிர்(ஒலி) மற்றும் பாதுஷா நாயகத்தின் தாயார் செய்யது பாத்திமா, துணைவியார் செய்யது அலி பாத்திமா என்னும் ஜைனப், சகோதரி செய்யது ராபியா, மைத்துனர் செய்யது ஜைனுல் ஆப்தீன் மற்றும் பல இறைநேசர்களின் அடக்க ஸ்தலங்களும் உள்ளது.
இங்குள்ள தர்ஹாவில் ஜாதி மத பேதமின்றி மன நலம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆன்மீக சிகிச்சைகாக இங்கு வருகை தந்து நலம் பெற்று செல்கின்றனர். மன்னர் ஆட்சி காலத்தில் ராமநாதபுரத்தை ஆண்ட முத்துகுமார சுவாமி ரகுநாத சேதுபதியின் மாமனார் முத்து விஜயன், நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது ஏர்வாடி தர்ஹாவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகத்தின் மகிமை அறிந்து அங்கு சென்று நோய் குணமாகியுள்ளார். இதனை மருமகன் மன்னர் சேதுபதியிடம் தெரிவித்து உள்ளார்.
மன்னரும் தனக்கு ஆண் வாரிசு வேண்டும் வேண்டும் என்ற எண்ண வேண்டுதலோடு தனது மனைவியுடன் பாதுஷா நாயகத்தின் சமாதிக்கு சென்றுள்ளார். அடுத்த ஆண்டே அவர்களுக்கு ஆண் வாரிசு பிறந்தது. இதற்கு பகரமாக மன்னர் எர்வாடி தர்ஹா அருகே அதனை சுற்றியுள்ள நீண்ட நிலங்களை 6666 குறுக்கம் முத்து குமார விஜய ரெகுநாத சேதுபதி காட்டு தேவர்தானமாக வழங்கினார்.
இந்நிலையில் 850 ஆண்டுகளாக இந்த தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இதனை மதநல்லிணக்க சந்தனகூடாக அறிவிக்கப்பட்டு அரசு சார்பில் மாவட்ட அளவில் விடுமுறை அளிக்கப்படும். இந்த சந்தனகூடு திருவிழா நிகழ்ச்சி, சாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு எடுத்துக்காட்டாக சந்தனக்கூட்டை தாங்கும் அடித்தளம் ஆசாரி சமூகத்தினரால் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். அடிக்கூடு, நடுக்கூடு,நாடார் சமூகத்தினர் பனை மட்டையில் இருந்து உரித்து எடுக்கப்பட்ட நார் வழங்குவார், மேல்கூடு ஆகிய கூடுகளை யாதவர்களும், ஆதிதிராவிடர்களும் தர்காவில் இருந்து தூக்கி வந்து அடுக்கடுக்காக வைத்து அலங்கரிப்பார்கள்.
முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மனமுவந்து கொண்டு வரும் கடல் நீரை கொண்டு தர்கா சுத்தம் செய்யப்படும். சம்பிரதாயப்படி தீப்பந்தங்களுக்காக சலவை தொழிலாளர்கள் கொண்டு வந்த துணிகளில் ஆதி திராவிடர்கள் வழங்கிய நேர்ச்சை எண்ணையை ஊற்றி சந்தனக்கூடு வழிகாட்டியாக அமைத்து கூடு புறப்பட தயார் நிலையில் வைப்பார்கள்.
ஏர்வாடியில் இருந்து யானைகள், குதிரைகள் பவனி வர மேள தாளம், ஆடல்பாடல், வான வேடிக்கைகளுடன் ஊர்வலம் தர்காவை நோக்கி வரும். ஏர்வாடியில் இருந்து காட்டுப்பள்ளி தர்கா போகும் வழிவரை யாதவர் சமூகத்தினர் சந்தனக்கூட்டை தூக்கி வருவார்கள். அங்கிருந்து தர்கா வரை முத்தரையர் சமூகத்தினர் தூக்கி வருவார்கள். இவ்வாறு அனைவரும் இணைந்து ஒன்றாக இந்த விழாவை கொண்டாடுவது ஆனந்த கண்ணீரை வரவழைக்கும்.
ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த சந்தன கூடு திருவிழாவில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகிறார்கள். இந்த வருடமும் கட்டுகடங்கா கூட்டத்துடன் ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. சமய நல்லிணக்கத்து எடுத்துக்காட்டாக திகழும் தமிழகத்தின் பல எடுத்துக்காட்டுகளில் ஏர்வாடி தர்ஹாவும் ஒன்று என்பதில் ஐயமில்லை. மேலும் தர்காவுக்கு வந்து செல்ல பஸ் வசதி குறைவாக இருக்கிறது.
இதுபற்றி அஜ்முல் கான் கூறுகையில்,‘‘ தர்காவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான யாத்திரீகர்கள் வருகின்றனர். ஆனால் சேலம், பொள்ளாச்சி மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் சுற்றிதான் வரும் சூழ்நிலை இருக்கிறது. அப்படியே வரும் பஸ்கள் தர்காவுக்கு வராமல், ஏர்வாடியில் இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டி நிலை இருக்கிறது. பஸ்கள் ஏர்வாடி தர்கா வரை செல்ல ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என்றார்.
The post காலம் கடந்து நிற்கும் மதநல்லிணக்க ஏர்வாடி தர்காவுக்கு பஸ் வசதி வேண்டும் appeared first on Dinakaran.