தேய்பிறை அஷ்டமி 22.3.2025
முன்னுரை
ஒரு மாதத்தில் இரண்டு பருவங்கள் உண்டு. ஒவ்வொரு பருவங்களும் 15 திதிகளைக்கொண்டது. இதில் எட்டாவது திதி மிகச் சிறப்பு வாய்ந்தது. அஷ்டமி என்று சொல்வார்கள். இந்த அஷ்டமி என்பது எல்லா கடவுள்களுக்கும் உரியது. பெருமாளுக்கு உரிய அஷ்டமி திதியை கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். துர்க்கைக்கு உரிய அஷ்டமி திதியை துர்க்காஷ்டமி என்று கொண்டாடுகின்றோம். அதுபோல் சிவபெருமானுக்கு உரிய அஷ்டமி திதியை கால பைரவ அஷ்டமி என்று மிகச் சிறப்பாக அனுசரிக்கிறோம். இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வணங்குவது சாலச் சிறந்த நன்மையைத் தரும்.
எட்டு என்றால் கஷ்டமா?
பொதுவாகவே எட்டு என்கிற எண் கஷ்டத்தைத் தருகின்ற எண்ணாக நாம் கருதுகின்றோம். அஷ்டமி திதியில் எந்த சுப காரியங்களும் செய்யப்படுவது இல்லை. ஆனால் ஆன்றோர்கள் இந்த அஷ்டமி திதியை புனித நாளாகக் கருதுகின்றனர். எட்டு என்பது உண்மையில் மிகச்சிறந்த எண். எட்டாததையும் எட்ட வைக்கும் எண். ஆன்மிகத்தில் மிக உயர்ந்த எண். மகாலட்சுமி எட்டு தோற்றங்களில் காட்சியளிப்பதால் அஷ்ட லட்சுமி என்று சொல்லுகின்றோம். செல்வங்களை அஷ்ட ஐஸ்வரியங்கள் என்று சொல்லுகின்றோம். சித்திகளை அஷ்ட மகா சித்திகள் என்று சொல்லுகின்றோம். எனவே ஆன்மிகத்தில் மிக உயர்ந்த இடத்தை பிடித்த அஷ்டமி திதியில் இறைவனை வணங்குவதன் மூலமாகவும் விரதம் இருப்பதன் மூலமாகவும் நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்.
பைரவர் யார்?
சிவபெருமான் உருவத்திலும், அருவத்திலும், அருஉருவத்திலும் காட்சி தருவார். இதனை அருவம், உருவம், அருவுருவம் என்றும், பலவாறாக சைவர்கள் அழைக்கின்றனர். அவருடைய திருமேனி வடிவங்கள் 64 என்பர். 64 திருமேனி வடிவங்களில் ஒன்று வைரவர் எனப்படும் பைரவர். ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். காலபைரவர் ஆக உலகைக் காக்கிறார். காலாக்கினி பைரவராக உலகைப் பிரளய காலத்தில் ஒடுக்குகின்றார். சிவனுக்கு ரிஷப வாஹனம் இருப்பது போல பைரவருடைய வாகனமாக நாய் அமைந்திருக்கிறது. அதனால் நாய்களுக்கு பைரவர் என்ற பெயர் உண்டு.
பஞ்சகுண சிவ மூர்த்திகளில் உக்ர மூர்த்தி
வக்கிரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை முதலிய குணங்களை பஞ்ச குணம் என்கிறோம். இந்த குணங்களின் அடிப்படையில் சிவனது ஐந்து மூர்த்தங்கள் வகைப்படுத்தப்படுதலை பஞ்சகுண சிவமூர்த்திகள் என்கிறார்கள் சைவர்கள்.
*உக்ர மூர்த்தி பைரவர்
*சாந்த மூர்த்தி தட்சிணாமூர்த்தி
*வசீகர மூர்த்தி பிட்சாடணர்
*ஆனந்த மூர்த்தி நடராசர்
*கருணா மூர்த்தி சோமாசுகந்தர்
அட்ட பைரவர்கள்
அட்ட பைரவர்கள் என்பவர்கள் எண் திசைகளுக்கு ஒன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் ஆவார். சில கோயில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சி தருகிறார்கள்.
யார் யார் இந்த பைரவர்கள். அவர்கள் பெயர் என்னென்ன..?
*அசிதாங்க பைரவர்
*ருரு பைரவர்
*சண்ட பைரவர்
*குரோதன பைரவர்
*உன்மத்த பைரவர்
*கபால பைரவர்
*பீக்ஷன பைரவர்
*சம்ஹார பைரவர்
*சிவனுக்கு அட்ட வீரட்ட தலங்கள் உண்டு. அதைப்போல அஷ்ட பைரவ தலங்களும் தமிழ்நாட்டில் *பிள்ளையார்பட்டி அருகில் உண்டு.
கால பைரவர்
பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோயிலின் வடகிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் திகம்பர ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரண்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார். கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமிதான் காலபைரவாஷ்டமி.
காலபைரவாஷ்டமியில் என்ன செய்ய வேண்டும்?
காலபைரவாஷ்டமி நாளில் சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளில் கலந்து கொண்டால் மன அழுத்தம், பயம் நீங்கி, தைரியமும் தன்னம்பிக்கையும், வீரியமும் வேகமும், உண்டாகி, சகல சௌபாக்கியங்களும் அடைவார்கள். சிவபெருமான் அபிஷேகப்பிரியன். சிவ அம்சம் பைரவர் என்பதால், கால பைரவருக்கு சந்தன அபிஷேகம் சிறப்பானது. உக்ர மூர்த்தியான இவரின் கோபம் தணிக்க சந்தனம் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பார்கள். கறுப்பு அல்லது சிவப்பு வஸ்திரம் சாத்தி, சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். மிளகு தீபமும் நல்லெண்ணெய் தீபமும் சிறப்பானது.
சிவனா? சிவாம்சமா?
பைரவர் சிவனுடைய அம்சமாகவும் சொல்வது உண்டு. சிவனே பைரவராக இருப்பதாகவும் சொல்வது உண்டு. சிவன் பல்வேறு காரணங்களுக்காக தன்னுடைய அம்ச மூர்த்தியாக பல பைரவர்களைப் படைத்து உலகில் அனுப்பி பல்வேறு தொழில்களைச் செய்ய வைப்பதுண்டு. ஒரு கட்டத்தில், உலகியலில் உள்ள சிக்கல்கள் அளவு கடந்து போகும் பொழுது அல்லது சாதுக்கள் மிக மிகத் துன்பப்படும் பொழுது அவர் பைரவராக தோன்றுவார். அசுர சக்திகள் வேறு எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாதபடி ஓங்கி நிற்கும்போது சிவபெருமானே பைரவராக வந்து அவற்றையெல்லாம் அழித்து மக்களைக் காக்கிறார். வஜ்ரம் போல மக்களுக்கு பாதுகாப்பாக விளங்குகிறார் என்பதால் அவரை வஜ்ரமூர்த்தி அல்லது வைரவ மூர்த்தி என்றும் அழைப்பதுண்டு.
பைரவரே காவலர்
பொதுவாகவே ஒரு ஊர் இருந்தால் அதற்கு ஒரு காவல் தெய்வம் இருக்கும். அதைப்போலவே ஒரு திருக்கோயில் இருந்தால் அந்தத் திருக்கோயிலைக் காப்பதற்கு ஒரு காவல் தெய்வம் இருக்கும். ஆறு, குளம், கடல், ஏரி முதலிய தீர்த்தங்கள் பொங்கி பிரவகித்து நாட்டை அழித்துவிடாமல் காப்பதற்காக ஒரு காவல் தெய்வம் உண்டு. இப்படி இயற்கையின் சீற்றத்தை அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொண்டு, ஊரையும் திருத்தலங்களையும், தீர்த்தங்களையும் காப்பதால் இவரை ஊர்க்காவலர் என்றும் தீர்த்த காவலர் என்றும் திருத்தலக் காவலர் என்றும் அழைப்பதுண்டு. வடவழியில் தீர்த்த பாலகர், ஷேத்திரபாலகர் முதலிய சொற்களாலும் இவர் குறிப்பிடப்படுவது உண்டு.
பைரவரின் வீரத்தோற்றம்
வீரத்தோடும் தீரத்தோடும் உக்கிரத்தோடும் கொண்ட தோற்றம் என்பதால் இவரை எப்பொழுதும் உக்கிர பாலகன் என்றும் அழைப்பார்கள். ஒரு சமயத்தில் இருக்கக்கூடிய சில தெய்வ மூர்த்த அமைப்புக்கள் மற்றொரு சமயத்தோடு பொருத்திப் பார்ப்பதை ஒப்பாய்வு செய்தல் என்பார்கள். அந்த அடிப்படையில் சைவ சமயத்தில் உள்ள பைரவரின் வரலாற்றையும் தோற்றங் களையும் அவருடைய உக்கிரத்தையும் அதற்கு நிகரான பெருங்கருணையையும் பார்க்கின்றபொழுது வைணவத்தில் நமக்கு திடீரென்று ஆவிர்பவித்த நரசிம்ம மூர்த்தியின் தோற்றம் நினைவுக்கு வரும். பேராற்றல், பெரும் கருணை, உக்கிரமான தோற்றம் இவற்றைப் பார்க்கும்போது இப்படித் தோன்றும்.
நரசிம்ம மூர்த்தியும் பைரவரும்
உக்கிரமாக இருக்கின்ற பொழுது உக்கிர நரசிம்மர் என்று அழைப்பது போலவே பைரவரின் உக்கிர தோற்றத்தை வைத்து உக்கிர பைரவர் என்று அழைப்பார்கள். அதே சமயம் யோகிகளுக்கு ஞானத்தைத் தருவதால் நரசிம்மரை யோக நரசிம்மர் என்று அழைப்பது போலவே, பைரவரையும் யோக பைரவர் என்ற நிலையில் பார்ப்பதும் உண்டு. பஞ்சபூதங்களையும் காப்பவராக விளக்குவதால் பூத பைரவர் என்றும் அவரைச் சொல்லுவார்கள். தட்சிணாமூர்த்தியை போல ஞானத்தை அன்பர்களுக்கு அள்ளி அள்ளி வழங்குவதால் ஞானபைரவர் என்றும் அழைப்பது உண்டு. எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி, சகல ஐஸ்வரியங்களையும் வாரி வாரிக் கொடுக்கும் வல்லமை பெற்றவர் பைரவர். பைரவர் தோற்றத்தைப் பற்றி சைவம் அல்லாத பிற சமயங்களான ஜயினம், பௌத்தம், சாத்த கௌமாரங்களிலும் செய்திகள் உண்டு.
பைரவ தீபம்
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் நிறைவு வழிபாடு பைரவருக்கு நடைபெறும் ஒவ்வொரு மாதமும் வருகின்ற தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் கோயிலுக்கு (அதாவது சிவாலயத்தில் உள்ள பைரவர் சந்நதிக்குச் சென்று) வணங்கி வழிபாடு நடத்துவதன் மூலமாக எல்லையில்லாத நன்மைகளைப் பெறலாம். அன்று பைரவர் சந்நதியில் பிரத்தியேகமாக தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்துக்கு பைரவ தீபம் என்றே பெயர். சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நல்லெண்ணெய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். இதை முறையாக பெரியோர்களிடம் கேட்டுச் செய்ய வேண்டும். இந்த தீபத்தின் வெளிச்சத்தில் அச்சம் விலகி ஓடும் மனதில் தெளிவும் தைரியமும் பிறக்கும் பிறகு வெற்றி தானே வந்தடையும்.
காசியில் பைரவர்
தீபம் என்றால் திருவண்ணாமலை ஞாபகத்துக்கு வருவது போல, பைரவர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது காசி. காசியில் உள்ள மிகப் பழமையான சிவன்கோயில் காசி கால பைரவர் கோயில். ‘‘கால’’ என்ற சொல் மரணத்தையும் விதியையும் குறிக்கிறது. கால பைரவரைக் கண்டு விதியும் அஞ்சும். மரணமும் நெருங்காது. காசியில் உள்ள கால பைரவர் கோயிலின் வைரவ தரிசனம் அருமையாக இருக்கும். வெள்ளி முகம் கொண்ட காலபைரவர் மிக விரிந்த கண்களுடனும், பெரிய மீசையுடனும், முழங்கால் அளவு நீண்ட கரங்களுடனும் காட்சி அளிப்பார். கண்களில் உக்கிரமும் கருணையும் ஏக காலத்தில் பிரதிபலிக்கும். அவருக்கு அருகிலே அவரது வாகனமாக நாய் இருக்கும். இதே கோயிலின் பின் பகுதியில் சேத்திரபால பைரவர் தரிசனம் கிடைக்கும். ஒருவர் காசியில் வாழ வேண்டும் என்றால் இவருடைய அனுமதி வேண்டும். காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யமபயம் கிடையாது. பிரம்மாவின் சிரசு கபாலமாக மாறி, பிரமஹத்தி தோஷத்திற்கு பைரவர் சக்தி ஆளாகி முடிவில் காசி மாநகர எல்லையில் கால் வைத்தபோது சிவபெருமான் காட்சி தந்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி காசிமாநகர காவல் தெய்வமாக எழுந்தருள அருள்புரிந்தார். காசி மாநகர எல்லையில் எட்டுத் திக்கிலும் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளி எல்லையைப் பாதுகாக்கின்றனர்.
நாய் வாகனம்
நம்முடைய சமய மரபில் ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு வாகனம் இருக்கிறது. அநேகமாக உலகத்தில் உள்ள அத்தனை உயிருள்ள, உயிரற்ற பொருள்களையும் (சர, அசர) இறைவன் அன்போடு நேசிக்கிறான் என்பதைக் குறிக்கும் தத்துவம் தான் இந்த வாகனத் தத்துவம். சிறிய உருவமான எலி (மூஞ்சூறு) தொடங்கி மிகப்பெரிய உருவமான யானை வரை பல்வேறு பிராணிகளும் இறைவனுக்கு வாகனமாக அமைந்திருக்கின்றன. மனித ரல்லாத பூத வாகனமும் உண்டு. இயற்கை ஒளிகளான சந்திர சூரியர்கள் (சந்திர பிரபை, சூரிய பிரபை) கூட வாகனம் தான். ஏன் தாவர இனமான கற்பக விருட்சம்கூட (இறைவனுக்கு வாகனமாக இருப்பதை பார்க்கின்றோம். ஆனால் கால பைரவருக்கு நாய் வாகனமாக இருக்கிறது.
காரணம் என்ன?
பெரும்பாலும் அடியவர்கள் இறைவனிடம் தங்களைப் பற்றி குறிப்பிடும் பொழுது ‘‘நான் யானையாக இருக்கிறேன்’’ பூனையாக இருக்கிறேன் என்றெல்லாம் குறிப்பிடுவதில்லை. நாயாக இருக்கிறேன் என்றுதான் குறிப்பிடுகின்றார்கள். நாயினும் கடையேன் என்று தன்னை மாணிக்கவாசக சுவாமிகள் கூறிக்கொள்கிறார் நாயேன், நாயடியேன், அடிநாயினேன், ஊர்நாயின் கடையேன் என்று திரும்ப திரும்ப தன்னைக் கீழ்ப்படுத்திக் கொள்கிறார் திருவாசகத்தில் 67 இடங் களில் நாயேன் என்று பாடியுள்ளார். நன்றி உணர்ச்சிக்காகப் பாராட்டப்பட்டாலும் விலங்குகளில் மிகக் கீழானதாகக் கருதப்படுவது நாய். இறைவனை மிக உயர்ந்தவனாகவும், தன்னை மிகத் தாழ்ந்தவனாகவும் கூறிக் கொள்வது பக்தர்களின் இயல்பு. மணிவாசகர் தன்னை மனிதரில் மிகத் தாழ்ந்தவன் என்று சொல்லிக் கொள்வதோடு நிற்காமல் நாயேன் என்றும் நாயினும் கடையேன் என்றும் இகழ்ந்து கொள்கிறார். சிவபுராணம் (60வது அடி) நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே “நான் என்னும் செருக்கு முற்றிலும் ஒழிந்துவிட்ட அவரது மனநிலையை இதிலிருந்து உணரமுடிகிறது. மகா விசுவாசம் என்பதற்கு அடையாளமாக நாய் இருக்கிறது. எஜமானனை விட்டு அது விலகுவதில்லை. அதைப்போல இந்த ஆன்மா எஜமானனாகிய பரமாத்மாவை விட்டு விலகுவதில்லை. இதற்கு அடையாளமாகத் தான் பைரவருக்கு நாய் வாகனமாக இருக்கிறது.
The post கால(ன்) பயம் நீக்கி ஆயுள் அதிகரிக்கும் கால பைரவர் appeared first on Dinakaran.