சென்னை,
தெற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்தது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.