கார்த்திகை மாதம் விரதம் எதிரொலி மீன்கள் விலை குறைந்தது

2 months ago 10

சென்னை: கார்த்திகை மாதம் விரதம் எதிரொலியாக மீன்கள் விலை நேற்று குறைந்து காணப்பட்டது. வவ்வால் கிலோ ரூ.900, சங்கரா ரூ.350, நண்டு ரூ.300க்கும் விற்பனை செய்யப்பட்டன. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று அதிகாலை முதல் மக்கள் அதிக அளவில் குவிந்து மீன்வாங்க வரத்தொடங்கினர். மேலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் கரை திரும்பினர். இதனால் வஞ்சிரம், கொடுவா, பாறை உள்ளிட்ட மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது.

அதே நேரத்தில் கார்த்திகை மாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்ப சுவாமியை வேண்டி மண்டல பூஜைக்காக மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவது வழக்கம். இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் கோவிலில், மாலை அணிவித்து நேற்று விரதத்தை தொடங்கினர். விரதம் நாட்களில் அசைவ உணவுகளை தவிர்ப்பது வழக்கம். கார்த்திகை மாதம் பிறப்பால் மீன்கள் விலையும் கடந்த வாரத்தை விட குறைந்து காணப்பட்டது.

அதாவது கடந்த வாரம் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1000க்கு விற்கப்பட்டது. இது நேற்று ரூ.800க்கு விற்கப்பட்டது. இதே போல வெள்ளை வவ்வால் கிலோ ரூ.1100லிருந்து ரூ.900, கொடுவா ரூ.600லிருந்து ரூ.400, சங்கரா ரூ.450லிருந்து ரூ.350, இறால் ரூ.500லிருந்து ரூ.350 ஆகவும் விலை குறைந்து இருந்தது. மேலும் நண்டு விலை கிலோ ரூ.500லிருந்து ரூ.300 ஆக குறைந்து இருந்தது. விலை குறைந்து இருந்தால் அதிக அளவில் மக்கள் மீன்களை வாங்கி சென்றனர்.

The post கார்த்திகை மாதம் விரதம் எதிரொலி மீன்கள் விலை குறைந்தது appeared first on Dinakaran.

Read Entire Article