கார்த்திகை மாத பிரமோற்சவத்தை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

2 months ago 9

*பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

திருமலை : கார்த்திகை மாத பிரமோற்சவத்தையொட்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர கார்த்திகை மாத பிரமோற்சவம் நாளை (28ம் தேதி) தொடங்கி டிசம்பர் 6ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி கோயிலை சுத்தம் செய்யும் பணியான, கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நேற்று காலை நடந்தது.

இதையொட்டி அதிகாலை சுப்ரபாதம், சகஸ்ரநாம அர்ச்சனைக்கு பின்னர் காலை 6 மணி முதல் 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. அப்போது கோயில் வளாகம், சுவர், மேற்கூரை, பூஜைபொருட்கள் ஆகியற்றை சுத்தம் செய்தனர். பின்னர் நாமக்கட்டி, திருச்சூர்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைகற்பூரம், கட்டிக் கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கிழங்கு போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

அதன்பின்னர் காலை 9.30 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் காரணமாக குங்குமார்ச்சனை சேவை மற்றும் வி.ஐ.பி.தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதில் இணை செயல் அதிகாரி வீரபிரம்மம், துணை செயல் அதிகாரி கோவிந்தராஜன், அர்ச்சகர் பாபு சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்வர்ண குமார் ரெட்டி கோயிலுக்கு ஆறு திரைகளையும் (ஸ்கிரின்), திருப்பதியை சேர்ந்த பக்தர்கள் சுதாகர், ஜெயச்சந்திரா ரெட்டி, அருண் குமார் ஆகியோர் நான்கு திரைகள் மற்றும் 25 உண்டி பைகளை நன்கொடையாக வழங்கினர்.

The post கார்த்திகை மாத பிரமோற்சவத்தை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் appeared first on Dinakaran.

Read Entire Article