கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம் அண்ணாமலையார் கோயிலில் கோபுரங்கள் தூய்மைப்படுத்தும் பணி

2 hours ago 1

*தீயணைப்பு வாகனம் மூலம் நடந்தது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதையொட்டி, கோயில் கோபுரங்களை தீயணைப்பு வாகனத்தை பயன்படுத்தி தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் 7ம் நாளான 10ம் தேதி மகா தேரோட்டமும், நிறைவாக 13ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

கார்த்திகை தீபத்திருவிழாவில் இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, விரிவான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும், சுவாமி திருவீதியுலா வாகனங்கள் சீரமைப்பு, தேர் புதுப்பிக்கும் பணி, பக்தர்களுக்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை ஒருங்கிணைக்க, மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் பிரதான கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. அதையொட்டி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் தீயணைப்பு வாகனம் மூலம், கோபுரங்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அண்ணாமலையார் கோயில் பிரதான கோபுரங்களின் கல்காரம் (அடிப்பகுதி) வரை தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.

The post கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம் அண்ணாமலையார் கோயிலில் கோபுரங்கள் தூய்மைப்படுத்தும் பணி appeared first on Dinakaran.

Read Entire Article