கார்த்திகை தீபத்திருவிழா: முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை

5 hours ago 1

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 10.12.2024 அன்று திருத்தேர் திருவிழா மற்றும் 13.12.2024 அன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு நேற்று (14.11.2024) தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இதில் விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது பக்தர்களுக்கு போதிய போக்குவரத்து, குடிநீர், மருத்துவம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து துறைகளுக்கும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவுறுத்தினார்.

பக்தர்கள் வசதிக்காக கூடுதலான பேருந்துகள் மற்றும் இணைப்பு சிற்றுந்துகள் இயக்கவும் கூடுதலான தொடர்வண்டி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கவும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை முன்னதாகவே பொது மக்கள் அறியும் வகையில் வெளியிடவும் முடிவெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், அரசு முதன்மைச் செயலாளர்கள், உள்துறை, இந்து சமய அறநிலையத் துறை, வருவாய் துறை, போக்குவரத்து துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உள்ளாட்சி துறை, சுகாதாரம் குடும்ப நலத்துறை மற்றும் பொதுத்துறை ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல் துறை இயக்குநர், காவல் துறை தலைவர் நுண்ணறிவு, காவல் துறை தலைவர் வடக்கு மண்டலம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், மற்றும் காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article