கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் நெய் காணிக்கை செலுத்த சிறப்பு ஏற்பாடு: கலெக்டர் தொடங்கி வைத்தார்

2 weeks ago 4

திருவண்ணாமலை, நவ.5: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்த அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீபத்திருவிழா உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழாவின் நிறைவாக, டிசம்பர் 13ம் தேதி மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். தீபத்திருவிழாவை முன்னிட்டு, மலை மீது ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பிரகாசிக்கும். எனவே, மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், மற்றும் 1,000 மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், மகா தீபத்திற்காக பக்தர்கள் நெய் காணிக்கையை ரொக்கமாக செலுத்த அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி, கோயில் நிர்வாக அலுவலகம் எதிரில் நெய் காணிக்கை சிறப்பு பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. அதனை, கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார். மேலும், நெய் காணிக்கை தொகையை செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டார். அப்போது, டிஆர்ஓ ராமபிரதீபன், கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம்பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மகா தீபம் நெய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள், ஒரு கிலோ நெய் ₹250, அரை கிலோ நெய் ₹150, கால் கிலோ நெய் ₹80 என்ற அடிப்படையில் ரொக்கமாகவும் அல்லது யுபிஐ பணபரிவர்த்தனை மூலமும் செலுத்தலாம். அதற்கான ரசீது வழங்கப்படும். மேலும், கோயில் இணையதளம் மூலம் ஆன்லைனிலும் காணிக்கை செலுத்தலாம்.

The post கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் நெய் காணிக்கை செலுத்த சிறப்பு ஏற்பாடு: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article