அண்ணாநகர்: தனியார் டிராவல்ஸ் நிறுவன அலுவலகத்தில் புகுந்து மேலாளரை தாக்கிய டிரவைர்கள் 2 பேரை கைது செய்தனர். வாடகை பாக்கி விவகாரத்தில் இது நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் முதிலியார் தெருவை சேர்ந்தவர் சதீஷ்பாபு(49). இவர் சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருகின்றார். கடந்த 16ம்தேதி பணியில் இருந்தபோது 8 பேர் வந்துள்ளனர்.
இதில் 4 பேர் அலுவலகத்தில் புகுந்து சதீஷ்பாபுவிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் வெளியே நின்றிருந்த 4 பேரும் வந்து அவரை அடித்து உதைத்துள்ளனர். இதை தடுத்த சக தொழிலாளர்களையும் அடித்து உதைத்துள்ளதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த சதீஷ்பாபு மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுசம்பந்தமாக தனியார் மருத்துவமனையில் இருந்து கொடுத்த தகவல்படி, திருமங்கலம் போலீசார் சென்று சதீஷ்பாபுவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சதீஷ்பாபு கூறியதாவது;
எங்க டிராவல்சில் பணியாற்றிவந்த பெரம்பூர் திருவிக.நகர் பகுதியில் சேர்ந்த டிரைவர்கள் மோகன்ராஜ்(39), சாதிக் பாஷா ((41) ஆகியோருக்கு கார் வாடகை பாக்கி ஒரு லட்சத்து 30 ஆயிரம் இருந்ததால் அவற்றை கேட்பதற்கு வந்தனர். அப்போது 65 ஆயிரம் காசோலையாக கொடுத்தபோது வாங்காமல் தகராறு செய்ததுடன் என்னை தாக்கியதில் இடது கை எலும்பு முறிவு ஏற்பட்டு, ஒரு பல் உடைந்தது.
இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுசம்பந்தமாக திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து டிரைவர்கள் மோகன்ராஜ், சாதிக் பாஷா ஆகியோரை கைது செய்தனர். ‘’வாடகை பாக்கி பணத்தை தரவில்லை என்பதால் மேலாளரை தாக்கினோம்’ என்று தெரிவித்தனர். இதன்பின்னர் 2 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுசம்பந்தமாக 6 பேரை தேடி வருகின்றனர்.
The post கார் வாடகை பாக்கி விவகாரம்: ஆபீசில் புகுந்து மேலாளருக்கு அடி: டிரைவர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.