கார் மோதி தொழிலாளி பலி புற காவல் நிலையத்தை சூறையாடியதாக 12 பேர் கைது

2 months ago 12

 

விருத்தாசலம், செப். 30: கார் மோதி தொழிலாளி பலியானதில் புற காவல் நிலையத்தை சூறையாடிய 12 பேரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அருகே உள்ள கோமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராசலிங்கம் மகன் அறிவழகன் (25). இவர் அதே பகுதியில் உள்ள தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தனது சொந்த வேலை காரணமாக பைக்கில் விருத்தாசலம் சென்று விட்டு திரும்ப கோமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, மணலூர் மேம்பாலத்தில் எதிரே வந்த கார் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே அறிவழகன் பலியானார்.

தொடர்ந்து காரை ஓட்டி வந்த ஏற்காடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சம்பவத்தின் பிறகு தப்பித்து ஓடி தலைமறைவானார். காரில் இருந்த திருச்செங்கோட்டை சேர்ந்த பிரகாஷ், ஏற்காட்டை சேர்ந்த சரண்ராஜ் ஆகியோரும் பலத்த அடிபட்டனர். இதுகுறித்து அறிந்த அப்பகுதியினர் சம்பவம் குறித்து விருத்தாசலம் காவல்துறைக்கு தகவல் அளித்துவிட்டு காயமடைந்த இருவரையும் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த அறிவழகனின் உறவினர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். அப்போது பிரகாஷ், சரண்ராஜ் ஆகிய இருவரை பார்த்ததும் அவர்களை தாக்கி உள்ளனர். இதனைப் பார்த்த மருத்துவமனை புற காவல் நிலைய காவலர்கள், அவர்கள் இருவரையும் மீட்டு அங்குள்ள புற காவல் நிலையத்தில் பாதுகாப்பாக அமர வைத்துள்ளனர். அப்போது அந்த கும்பல், புற காவல் நிலையத்தில் உள்ள கதவின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மற்ற நோயாளிகள் பதறியடித்து வெளியே ஓடினர். தொடர்ந்து தகவல் அறிந்து விருத்தாசலம் போலீசார் வந்தபோது அவர்கள் அனைவரும் தப்பித்து ஓடி தலைமறைவாகியுள்ளனர். இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சாமிநாதன் விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட கோமங்கலம் பகுதியை சேர்ந்த வேணு மகன் பிரதீப் (21), மருதை மகன் கோகுல்ராஜ்(21), ராஜலிங்கம் மகன் விக்கி என்கிற வேதாச்சலம்(28),

தர்மலிங்கம் மகன் அன்பரசன்(30), மருதை மகன் பாபு(40), செல்வமணி மகன் ராமராஜன்(35), ராஜேந்திரன் மகன் ஆனந்தகுமார்(22), ராமலிங்கம் மகன் கோபி(38), சின்னதுரை மகன் ஜெயபிரகாஷ்(38), செல்வமணி மகன் ஸ்ரீதர்(40), ராமச்சந்திரன் மகன் சதீஷ்குமார்(31), கோபால் மகன் சங்கர் (44) ஆகிய 12 பேர் மீது கொலை முயற்சி, பொது சொத்தை சேதப்படுத்துதல், அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் காரணமாக மீண்டும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அரசு மருத்துவமனை, காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கூச்சலிட்டனர். அப்போது சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிலர்தான், ஆனால் பலரை கைது செய்துள்ளதாக கூறி கைது செய்யப்பட்டவர்களை ஏற்றி சென்ற வாகனத்தை மறித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் நிலைய பகுதியில் நேற்று முழுவதும் பரபரப்பு நிலவியது.

The post கார் மோதி தொழிலாளி பலி புற காவல் நிலையத்தை சூறையாடியதாக 12 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article