திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளம்பெண்ணை கார் ஏற்றிக் கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் கோட்டயம் அருகே கருகச்சால் பகுதியை சேர்ந்தவர் நீது ஆர். நாயர் (35). கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். சங்கனாச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் காலையில் வழக்கம்போல வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது வேகமாக வந்த ஒரு கார் நீது ஆர். நாயர் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த நீது ஆர். நாயர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நீது ஆர். நாயர் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதலில் இது ஒரு விபத்தாக இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.
ஆனால் தீவிர விசாரணையில் இந்த சம்பவம் ஒரு கொலை என்பது தெரியவந்தது. நீதுவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அன்ஷாத் கபீர் (37) என்ற ஆட்டோ டிரைவருக்கும் தொடர்பு இருந்து வந்து உள்ளது. அன்ஷாத்திடமிருந்து நீது அடிக்கடி பணம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் அதை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் நீதுவை கொலை செய்ய அன்ஷாத் கபீர் திட்டமிட்டுள்ளார். அதன்படி ஒரு காரை வாடகைக்கு எடுத்து உள்ளார். பின்னர் தன் நண்பரான அப்துல் சலாம் (35) என்ற ஆட்டோ டிரைவரை அழைத்துக் கொண்டு நீது வரும் வழியில் காத்திருந்துள்ளார். நீது நடந்து வருவதைப் பார்த்ததும் காரில் வேகமாக சென்று அவர் மீது மோதினார்.
இந்தக் காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் சங்கனாச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post கார் ஏற்றி இளம்பெண் கொலை: 2 பேர் கைது appeared first on Dinakaran.