காரைக்கால்-பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்: மக்களுக்கு எச்சரிக்கை

7 hours ago 1

காரைக்கால் : காரைக்கால்-பேரளம் இடையேயான பகுதியில் இறுதிகட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. காரைக்கால் – பேரளம் இடையிலான 23 கி.மீ.தூரம் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறும் நிலையில் ரயில் பாதையில் இருந்து மக்கள் விலகி இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் – பேரளம் இடையே உள்ள 23 கி.மீ. தொலைவுக்கு 1898-ம் ஆண்டு மீட்டர்கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டது. 87 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த இந்த தண்டவாளத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் மூலம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வந்தனர். மேலும், ஐஸ், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்லவும் ரயில்கள் பயன்படுத்தப்பட்டன. என்றாலும், போதிய வருவாய் இல்லை என்று கூறி 1987-ம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

கடந்த 24 ஆண்டுகளாக இப்பகுதிக்கு இடையே ரயில் போக்குவரத்து இல்லாமல் இருந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு நாகூர் – காரைக்கால் இடையே 10.5 கி.மீ. தொலைவுக்கு புதிதாக அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த ரயில் பாதையை பேரளம் வரை நீட்டிக்க வேண்டும் என்று திருநள்ளாறு வரும் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதனை தொடர்ந்து, காரைக்கால் – பேரளம் இடையே 23 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது.

கடந்த மார்ச் மாதம் இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், 8 பெட்டிகள் கொண்ட ரயில் மூலம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று (மே.20) இந்த பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; காரைக்கால் – பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மய அகல ரயில் பாதையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் முதன்மை தலைமை மின் பொறியாளர் முன்னிலையில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது.

எனவே, குறிப்பிட்ட நேரத்தில் இந்த ரயில் பாதையை யாரும் கடக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, காரைக்கால் – பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மய அகல ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் காலை 10 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என தெற்கு ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post காரைக்கால்-பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்: மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article