விழுப்புரம், ஜூலை 7: காரைக்கால் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கொலை வழக்கில் புதுச்சேரி கூலிப்படையினர் 7 பேர் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். காரைக்கால் திருநள்ளாறை சேர்ந்தவர் மணிமாறன் (32). தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட பொறுப்பாளரான இவர், மயிலாடுதுறையில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர், பிற்பகலில் காரில் காரைக்கால் நோக்கி சென்றார். செம்பனார்கோவில் காலஹஸ்தினாதபுரம் பகுதியில் உள்ள பள்ளி அருகே சென்றபோது, பின்னால் 2 கார்களில் வந்த சிலர், அவரது காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர் கார் கண்ணாடியை உடைத்து மணிமாறனை வெளியில் இழுத்துபோட்டு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு, அவர்கள் வந்த கார்களில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். தகவலறிந்து வந்த செம்பனார்கோவில் போலீசார் மணிமாறனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.
குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 2021 அக்டோபர் 22ம் தேதி காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராக இருந்த தேவமணி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மணிமாறன் முக்கிய குற்றவாளியாக இருந்தார். தற்போது அவர் ஜாமீனில் வந்திருந்தார். எனவே, அந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் இக்கொலை நடந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கொலை வழக்கு தொடர்பாக புதுச்சேரி கூலிப்படையினர் 7 பேர் நேற்று விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். புதுச்சேரி மடுகரை செல்வம் மகன் மணிகண்டன் (36), சண்முகாபுரம் சண்முகம் மகன் சரவணன் (33), அய்யங்குட்டிபாளையம் முத்து மகன் சகன்ராஜ் (29), கவுண்டன்பாளையம் பிரபாகரன் மகன் சரவணன் (28), தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர்கள் ஆனந்த் மகன் அஜய் (22), முனிதாஸ் மகன் முகிலன் (22), இருசப்பன் மகன் விஜயசங்கர் (30) ஆகிய 7 பேரும் வளவனூர் காவல் நிலையத்தில் ஆஜராகினர். தொடர்ந்து எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில் ஆஜரான 7 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
The post காரைக்காலில் பழிக்குப்பழியாக தவாக பிரமுகர் கொலை; வளவனூர் காவல் நிலையத்தில் புதுச்சேரி கூலிப்படையினர் 7 பேர் சரண் appeared first on Dinakaran.