பள்ளிகொண்டா, பிப்.1: பள்ளிகொண்டா அருகே காரில் கடத்திய 400 கிலோ போதை பொருட்களை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக 2 வடமாநில வாலிபர்களை கைது செய்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து வேலூர் மாவட்டம் வழியாக சென்னைக்கு காரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்துவதாக சென்னை ஐஜி அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த விரிஞ்சிபுரம் வல்லண்டராமம் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நேற்று காலை 6 மணியளவில் தீவிர வாகன தணிக்கை நடத்தினர். அப்போது, பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். அந்த காரில் 2 வாலிபர்கள் இருந்தனர். காரை சோதனை செய்ததில் பின் சீட்டுகளில் சிறிய அளவிலான 25 மூட்டைகள் இருந்தன.
இதுகுறித்து காரில் இருந்த வாலிபர்களிடம் போலீசார் கேட்டபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து, அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கூல்லிப் என 400 கிலோ எடை கொண்ட ₹1.25 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, அவற்றை காருடன் பறிமுதல் செய்து விரிஞ்சிபுரம் போலீசில் ஒப்படைத்தனர். மேலும், காரில் வந்த 2 பேரிடம் நடத்திய தீவிர விசாரணையில், இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரதாப்ராம்(32), உத்தம்குமார்(24) என்பதும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் போதை பொருட்களை கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும், போதை பொருளை சென்னையில் யாரிடம் ஒப்படைப்பதற்காக கடத்திச்சென்றார்கள்? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
The post காரில் கடத்திய 400 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் 2 வடமாநில வாலிபர்கள் கைது பெங்களூருவில் இருந்து சென்னைக்கு appeared first on Dinakaran.