?காரியத்தடை என்று காலண்டரில் போட்டிருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்?

4 hours ago 2


– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
செய்யும் செயலில் தடை உண்டாகும் என்று பொருள். நாட்காட்டியில் உள்ள ராசிபலன் பகுதியில், இதுபோன்ற வார்த்தைகளைக் காண இயலும். இதற்கு அத்தனை முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை.

?களத்திர தோஷம் என்றால் என்ன? அதற்கு என்ன பரிகாரம்?

– அபிலாஷ், விருகம்பாக்கம்.
ஜாதகத்தில், லக்ன பாவகத்திற்கு ஏழாம் இடம் என்பதை களத்ர ஸ்தானம் என்று சொல்வார்கள். இது வாழ்க்கைத்துணையைப் பற்றி அறிய உதவும் பாவகம் ஆகும். ஏழாம் பாவக அதிபதி மூன்றாம் வீட்டில் இருந்தால், களத்ர தோஷம் என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஏழாம் பாவகம் என்பது விருச்சிகம் ஆகும். இந்த விருச்சிக ராசிக்கு அதிபதி ஆகிய செவ்வாய், ரிஷப
லக்னத்திற்கு மூன்றாம் வீடாகிய கடகத்தில் அமர்ந்தால், அது களத்ரதோஷம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இப்படி களத்ர தோஷம் இருப்பவர்களுக்கு, மறுவிவாகம் செய்துகொள்ளும் அதிகாரம் உண்டு என்று சொல்லப்படுகிறது. இதுபோக, ஒரு சிலருக்கு அதிக காமமோ, இச்சையோ இருக்காது என்றும், பலன் சொல்வார்கள். பெரும்பாலும், வாழ்க்கைத்துணையால் சந்தோஷம் என்பது அறவே கிடைக்காமல், அவதிப்படுபவர்களின் ஜாதகங்களில் இதுபோன்ற அம்சத்தினைக் காண இயலும். இதற்குரிய பரிகாரம் என்றால், தாமதமாக திருமணம் செய்வது மட்டுமே. விதியை யாராலும் வெல்ல இயலாது. நமது ஜாதக பலனை அறிந்துகொண்டு, வாழ்க்கைத்துணையோடு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் மட்டுமே வெற்றி காண இயலும்.

?அம்மன் கோயில்களில் உப்பு, மிளகு வைத்து வழிபடுவது ஏன்?

– பொன்விழி, அன்னூர்.
அம்மன் கோயில் மட்டுமல்ல, வைத்தீஸ்வரன் கோயில் போன்ற புகழ்பெற்ற ஆலயங்களிலும் இதுபோன்று உப்பு, மிளகு வைத்து வழிபடுவது என்பது பழக்கத்தில் உள்ளது. உடல் ஆரோக்யம் வேண்டுவோர் இந்த வழிபாட்டினை மேற்கொள்வார்கள்.

?கல்யாணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் நாந்தி என்று ஒரு சம்ப்ரதாயம் வருகின்றதே, நாந்தி என்றால் என்ன?

– நரசிம்மன், காஞ்சிபுரம்.

சில குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாந்தி என்ற வார்த்தையை உபயோகிப்பார்கள். நாந்தி சிராத்தம் என்ற வார்த்தையின் சுருக்கமே நாந்தி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. நமது பரம்பரையில் உள்ள முன்னோர்களை வழிபட்டு, சுபநிகழ்ச்சிகளைத் துவக்க வேண்டும் என்பதற்காக, இந்த சம்ப்ரதாயமானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மற்ற பிரிவுகளைச் சார்ந்தவர்கள், திருமணத்தில் மணவறையில் பானைகளை வைத்து வழிபடுவார்கள். இது அவர்களுக்கான முன்னோர் வழிபாட்டு முறை ஆகும். எல்லா பிரிவினருமே முன்னோரை வழிபட்டுவிட்டுத்தான் சுபநிகழ்ச்சியைத் துவக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாந்தி என்ற சம்ப்ரதாயம் ஆனது. அவரவருக்கு உரிய முறைப்படி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

?மாலையில் துணி துவைக்கக்கூடாது என்கிறார்களே? ஏன்?

– ஜெ.மணிகண்டன், வேலூர்.
துணியைத் துவைத்தவுடன் அதனை வெயிலில் உலர்த்த வேண்டும். அப்பொழுதுதான் நமது வியர்வையின் மூலமாக அந்தத் துணிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் பாக்டீரியா போன்ற கிருமிகள் அழியும். வெயிலில் உலர்த்தப்படாத துணிகளில் கிருமிகளின் தாக்கம் நிச்சயமாக இருக்கும். மாலையில் துணிகளை துவைத்தால் வெயிலில் எப்படி காய வைக்க இயலும்? அதனால்தான் மாலையில் துணி துவைக்கக் கூடாது என்று சொன்னார்கள், நம் முன்னோர்கள். அதன் பின்னால் இருக்கும் அறிவியில் ரீதியான காரணத்தை உணர்ந்துகொண்டால், இதுபோன்ற சந்தேகங்கள் மனதில் எழாது.

?வேண்டுதல், நேர்த்திக்கடன் போன்றவற்றை எத்தனை ஆண்டுகளில் சுவாமிக்கு செலுத்த வேண்டும்?

– எம்.கீதா, கும்பகோணம்.
பிரார்த்தனை நிறைவேறியவுடன், காலதாமதம் செய்யாது உடனடியாக நேர்த்திக்கடனை செலுத்திவிட வேண்டும். வங்கியில் வாங்கும் கடனை எப்படி உடனுக்குடன் செலுத்திவிடு கிறோமோ, அதே போல வேண்டுதலையும் உடனடியாக நிறைவேற்றிவிட வேண்டும். காலதாமதம் செய்தால், வாங்கிய கடனுக்கு எப்படி வட்டி என்பது ஏறிக்கொண்டே செல்லுமோ, அதேபோல வேண்டுதலை நிறைவேற்றாத பட்சத்தில் வெவ்வேறு ரூபத்தில் தடைகள் என்பது வந்துகொண்டிருக்கும்.

?காதல் மணம்புரியும் ஜாதக அமைப்பு எது?

– சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.
ஜாதகத்தில், திருமணத்தைப் பற்றிப் பேசும் ஏழாம் பாவக அதிபதி, ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் அல்லது ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி ஏழில் இருந்தாலும் காதல் திருமணம் வெற்றியில் முடியும். ஏழாம் பாவக அதிபதி பதினொன்றாம் வீட்டில் வலிமை பெற்று அமர்ந்தாலும், காதல் திருமணத்திற்கு வாய்ப்புண்டு. இதுபோக ஜாதகத்தில் சுக்ரன் வலிமை பெற்று ஐந்து அல்லது ஏழில் நிற்க, காதல் திருமணத்திற்கான வாய்ப்பு என்பது உண்டு.

?காயத்ரி ஜபம் செய்யும்போது, ஏதேனும் ஒரு துணியை வைத்து கைகளை மூடிச் செய்வதன் தாத்பர்யம் என்ன?

– ஸ்ரீ நிவாசன், கும்பகோணம்.
காயத்ரி ஜபம் செய்வதை எவர் காண்கிறார்களோ, அந்த ஜபத்தினைச் செய்யும் பலன் ஆனது காண்பவர்களுக்குச் சென்றுவிடும், மாறாக ஜபம் செய்பவர்களுக்கு பலன் என்பது கிடைக்காது என்பதற்காக, சாஸ்திரத்தில் அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. இதுபோக, மற்றொரு சூட்சுமமான காரணம் என்பதும் உண்டு. அதனை உங்கள் வீட்டு சாஸ்திரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.

?எந்த இறைவனை எப்படி நின்று வணங்க வேண்டும்? வலது பக்கமாக நிற்க வேண்டுமா அல்லது இடது பக்கமாக நின்று வணங்க வேண்டுமா?

– வண்ணை கணேசன், சென்னை.
இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்னும்போது, எப்படி நின்று வணங்கினால் என்ன? இந்த தெய்வத்தை இப்படி நின்றுதான் தரிசிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் ஏதும் கிடையாது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை, எந்தப் பக்கம் நின்றும் வணங்கலாம். இறைவனை வணங்கும்போது மனதில் சிரத்தையுடன் கூடிய பக்தி இருந்தாலே போதுமானது. இறையருள் என்பது
நிச்சயமாகக் கிடைக்கும்.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

The post ?காரியத்தடை என்று காலண்டரில் போட்டிருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? appeared first on Dinakaran.

Read Entire Article