காரல் மார்க்ஸுக்கு சென்னையில் சிலை மற்றும் பி.கே.மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று 110- விதியின் கீழ் அவர் அறிக்கை வெளியிட்டு பேசியதாவது: உலக மாமேதை காரல் மார்க்ஸை பெருமைப்படுத்த அரசு விரும்புகிறது. 'உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்' என்ற பிரகடனத்தை, உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான ஒரே முழக்கமாக பொதுவுடைமைத் தத்துவத்தை வடித்துத் தந்தவர் புரட்சியாளர் காரல் மார்க்ஸ். 'இழப்பதற்கென்று எதுவுமில்லை - பெறுவதற்கோ பொன்னுலகு இருக்கிறது' என்ற நம்பிக்கை விதைகளை விதைத்தவர். அறிவுலகத் தொலைநோக்குச் சிந்தனையாளர். வரலாற்றில் பலரும் பிறக்கிறார்கள், பலர் வரலாற்றுக்குத் தொண்டாற்றி இருக்கிறார்கள். ஆனால், வரலாற்றின் போக்கையே மாற்றி அமைத்தவர்கள் சிலர் தான். அந்த ஒரு சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் கார்ல் மார்க்ஸ்.