காரமடை அருகே கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் காட்டு யானைகள் முகாம்: விவசாயிகள், மக்கள் அச்சம்

2 months ago 10

காரமடை: காரமடையை அடுத்துள்ள கணுவாய்பாளையம் பகுதியில் இருந்து செல்வபுரம் வழியாக பெரியநாயக்கன்பாளையம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் அவ்வப்போது வனவிலங்குகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் கட்டாஞ்சி மலை அடிவாரப்பகுதியில் முகாமிட்டுள்ளது. பகல் நேரங்களில் வனப்பகுதியில் இருக்கும் இந்த யானைகள் கூட்டம் இரவு வேளைகளில் அடிவார பகுதியில் உள்ள கணுவாய்பாளையம், காளம்பாளையம், சின்னட்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் முகாமிட்டு பயிர்களை தொடர்ந்து சேதம் செய்து வருகிறது.

இந்நிலையில், நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய நான்கு காட்டு யானைகள் கூட்டம் கட்டாஞ்சி மலை அடிவார பகுதியில் உள்ள கணுவாய்பாளையம் பகுதியில் முகாமிட்டது. தொடர்ந்து விளைநிலத்தில் முகாமிட்ட காட்டு யானைகளை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சப்தமிட்டும், அதிக ஒளியை உமிழும் விளக்கு வெளிச்சத்தை காட்டியும் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,“பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பத்துக்கும் மேற்பட்ட யானைகள் கொண்ட கூட்டம் கட்டாஞ்சி மலை அடிவாரப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் இரவு வேளைகளில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விளைநிலத்தில் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதம் செய்து வருகிறது.

மேலும், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்து இரவு வேளைகளில் செல்வபுரம் வழியாக கணுவாய்ப்பாளையம், காளம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால், மனித – வனவிலங்கு மோதல் ஏற்படும் முன் வனத்துறையினர் கட்டாஞ்சி மலை அடிவாரப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

The post காரமடை அருகே கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் காட்டு யானைகள் முகாம்: விவசாயிகள், மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article