திருமலை: ஆந்திராவில் தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மாநிலம் முழுவதும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள அம்மாநில அரசு, அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் வீரியம் குறைந்த கொரோனா தொற்று பல மாநிலங்களில் தற்போது வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட தம்பதிக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கொரோனா தாக்கத்தை தடுக்க மாநில சுகாதாரத்துறை முழுவீச்சில் களம் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் வழிபாட்டு தலங்கள், விருந்து நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், சமூக பொதுக்கூட்டங்கள் போன்றவற்றை போதுமானவரை குறைத்துக் கொள்ளவேண்டும்.
பஸ், ரயில் மற்றும் விமான நிலையங்களில் நிபந்தனைகளை கடைபிடிக்கவேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவேண்டும். சுகாதாரத்தை கடைபிடிக்கவேண்டும். அடிக்கடி கை, கால்களை கழுவவேண்டும். இருமல், தும்மல் வரும்போது மற்றவர்கள் மீது எச்சில் படாதவாறு கைக்குட்டை உள்ளிட்டவற்றை பயன்படுத்தவேண்டும். கூட்டம் இருக்கும் இடங்களில் இருமல் வரும்போது சற்றுவிலகி செல்வது நல்லது.
அதேபோல் காற்றோட்டம் குறைவான பகுதி மற்றும் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் கட்டாயம் முககவசம் அணியவேண்டும். கோவிட் தொற்று அறிகுறி இருந்தால் முன்கூட்டியே கண்டறிந்து தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். வெளிநாடுகளுக்கு சென்றுவருவோர் கட்டாயம் கோவிட் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.
காய்ச்சல், இருமல், சளி, தொண்டைவலி, சுவை அல்லது வாசனை தெரியாமல் இருப்பது, தலைவலி, தசைவலி, மூக்கில்நீர் வடிதல், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்யவேண்டும். உடல் நலம் பாதிப்பு இருந்தால் தனிமைப்படுத்திக்கொள்வது அவசியம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகளை நேற்று முதல் கடைபிடிக்க மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
* திருப்பதி கோயிலிலும் கட்டுப்பாடா?
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக பல்வேறு வெளிமாநில மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த அறிவிப்பை நாளை நடைபெறும் `டயல் யுவர் இஓ’ நிகழ்ச்சி மூலம் தேவஸ்தானம் அறிவிக்கலாம் என தெரிகிறது. ஆனால் உலக சுகாதார அமைப்பு இந்த கொரோனா தொற்று, வீரியம் இல்லாதது என்பதால் யாரும் அச்சப்படதேவையில்லை என மீண்டும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
The post கொரோனா தொற்று பரவல் ஆந்திராவில் கடும் கட்டுப்பாடுகள்: முக கவசம் அணிய வேண்டுகோள் appeared first on Dinakaran.