காய்ச்சல்.. சளி, இருமல்..வயிற்றுப்போக்கு, தொண்டை வலி சீதோஷ்ண நிலை மாற்றத்தால் அதிகரிக்கும் நோய் பாதிப்பு

3 weeks ago 5

பெரம்பூர்: ஒவ்வொரு காலகட்டத்திலும் தட்பவெப்ப நிலை மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபடும்போது பல்வேறு இணை நோய்கள் ஏற்படுகின்றன. பொதுவாக, அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் அதிகரிக்கும். இந்த காலகட்டங்களில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இல்லை என்றால் கண்டிப்பாக மருந்து மாத்திரைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

ஆண்டுதோறும் பொதுமக்கள் இந்த சீதோஷ்ண நிலை மாற்றங்களை எதிர்கொண்டு வந்தாலும் பாக்டீரியா மற்றும் வைரஸ் பாதிப்புகளில் அவர்கள் சிக்குவதும், அதன்பிறகு மருத்துவமனைக்கு சென்று மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு அதிலிருந்து வெளியே வருவதும் தொடர்ந்து வருகிறது.

கொரோனா தொற்றுக்கு பிறகு ஓரளவிற்கு நாட்டு மருந்து மற்றும் கை வைத்தியத்தில் இருந்த அக்கறை தற்போது சுத்தமாக பொதுமக்களுக்கு குறைந்து விட்டது என்றே கூறலாம். அந்த வகையில் மூலிகை தண்ணீரை குடிப்பது, தண்ணீரை காய்ச்சி அதில் மருத்துவ குணம் உள்ள பொருட்களை போட்டு கொதிக்க வைத்து குடிப்பது, வெளியே சென்று வந்தால் உப்பு நீரால் வாய் கொப்பளிப்பது போன்ற பல விஷயங்கள் கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு கை கொடுத்தது. ஆனால் அதன் பிறகு பொதுமக்கள் அதனை மறந்து தற்போது மீண்டும் சளி அல்லது காய்ச்சல் ஏற்பட்டால் மருந்தகத்திற்கு சென்று ஒரு மாத்திரையை வாங்கி போட்டுக்கொண்டு செல்கின்றனர்.

கொரோனா வைரஸ் மீது இருந்த பயம் மற்ற சாதாரண பாக்டீரியா, வைரஸ் மீது பொதுமக்களுக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது. எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரை சாப்பிட்டு பழக்கப்பட்ட சென்னை மக்கள் தற்போதுள்ள சீதோஷ்ண நிலையையும் சமாளிக்க மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். அந்த வகையில், கடந்த ஒரு மாதமாகவே சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழைப்பொழிவால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் இந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற வகையில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

சென்னையில் கடந்த சில நாட்களாக உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் சளி, த்ரோட் இன்பெக்சன் எனப்படும் தொண்டை தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. உடல் நலக்குறைவுக்காக மருத்துவமனைக்கு வருவோரில் 40 சதவீதம் பேருக்கு உணவு ஒவ்வாமை மற்றும் வயிற்றுப்போக்கு தொற்று பாதிப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலானோருக்கு இ கோலி எனப்படும் தீங்கு விளைவிக்கும் ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெரம்பூர் சென் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும் குடல் மற்றும் ஈரல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:
எஸ்கெரிச்சியா எனப்படும் இ கோலி என்பது மனிதர்களின் குடலில் வளரும் பாக்டீரியா. இதில் பெரும்பாலான வகைகள் உள்ளன. சில பாக்டீரியாக்கள் நன்மை செய்யும், அவற்றில் சில பாக்டீரியாக்கள் பாதிப்பை ஏற்படுத்திவிடும். குறிப்பாக, அசுத்தமான இறைச்சி, காய்கறி, பழங்கள், குடிநீர், பால் போன்றவற்றின் மூலமாக மனித உடலுக்குள் இவை செல்கின்றன. முறையாக சுத்தம் செய்யப்பட்டாலும் வேக வைக்காமல் அவற்றை உட்கொள்ளும் போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கு வாந்தி, கடுமையான வயிற்று வலி, காய்ச்சல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள்.

இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள தங்களுடைய மருத்துவரை அணுகி இதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொள்ளாமல் அஜாக்கிரதையாக இருந்தால் சிறுநீரக தொற்று வரை ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற பாதிப்புகளை கண்டறிய ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை போன்றவற்றை மேற்கொள்ளலாம். இதற்கு உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும் சிகிச்சைகளும் ஆன்டிபயாட்டிக் சிகிச்சைகளும் வழங்கப்பட்டாலே போதுமானது.

மேலும் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். வெளியிடங்களுக்கு சென்று வரும்போது உப்புநீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். இதன் மூலம் தொண்டையில் இன்பெக்சன் ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் தற்போது உள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற வகையில் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டாலே பருவ கால மாறுபாட்டினால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அச்சப்பட வேண்டாம்
பொதுவாகவே நவம்பர், டிசம்பர் மாதங்களில் பலருக்கும் சீதோஷ்ண நிலை மாறுபாட்டால் காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இருக்கும். அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு சற்று அதிகமாகவே இருக்கும். இதற்காக பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அதிலும் குறிப்பாக, தற்போது சில இடங்களில் உணவு ஒவ்வாமை வயிற்றுப்போக்கு மற்றும் தொண்டை தொற்று அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் முக்கிய காரணமாக உள்ளது.

குடிநீரில் கவனம்
தற்போது ஏற்பட்டுள்ள பாக்டீரியா தொற்று குறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மழை வெள்ள காலங்களில் காலரா டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலி காய்ச்சல் போன்ற பாதிப்புகள் பரவ அதிக வாய்ப்பு உளளது. அதனை கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களுக்கும் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மருத்துவ குழுக்கள் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சுகாதாரமில்லாத குடிநீர் மற்றும் உணவுகள் மூலம் பரவும் நோய்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்தவுடன் தண்ணீர் அதிகம் தேங்கும் பகுதிகளில் குடிநீரின் தரத்தை உறுதி செய்யுமாறும் போதிய அளவு குளோரின் கலந்த தண்ணீரை விநியோகிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் நோய் தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதார துறைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பொதுமக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும். சுகாதாரமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post காய்ச்சல்.. சளி, இருமல்..வயிற்றுப்போக்கு, தொண்டை வலி சீதோஷ்ண நிலை மாற்றத்தால் அதிகரிக்கும் நோய் பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article