
ஐதராபாத்,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 54 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்நிலையில், இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடக்கும் 55வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.
ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டும் எனில் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில், ஐதராபாத் அணிக்கு பின்னடைவாக அந்த அணியில் இடம் பிடித்திருந்த இளம் பேட்ஸ்மேனான ஸ்மரண் ரவிச்சந்திரன் காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து விலகி உள்ளார்.
அவருக்கு பதிலாக விதர்பாவுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடி வரும் இளம் ஆல்ரவுண்டரான ஹர்ஷ் துபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவரை ரூ.30 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..